ஸெய்ன்ஸித்தீக்
உலகை ஆளும் பல்வேறு துறைகள் இருந்தாலும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை விருத்தி செய்யும் முக்கிய கூறாக கடல் வளம் காணப்படுகிறது. அதிலும் நீலப்பொருளாதாரம் (Blue Economy) முன்னிலை வகிக்கின்றது.
நீலப் பொருளாதாரம் என்பது கடல் சூழலை பராமரித்தல் மற்றும் மீளுருவாக்கம் தொடர்பானது. அதன் நோக்கம் நிறுவனங்களுக்கு இடையே மாறுபடலாம். இருப்பினும், கடலோர வளங்கள் மற்றும் கடல் மேம்பாட்டிற்கான நிலையான வளர்ச்சி அணுகுமுறையை விவரிக்கும் போது இந்த வார்த்தை பொதுவாக சர்வதேச வளர்ச்சியின் நோக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இது மிகவும் வழக்கமான மீன்பிடி, மீன்வளர்ப்பு,
கடல் போக்குவரத்து, கடலோர, கடல் மற்றும் கடல்சார் சுற்றுலா அல்லது பிற பாரம்பரியப் பயன்பாடுகள் முதல் கடலோர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கடல் சுற்றுச்சூழல் சேவைகள் (அதாவது நீல கார்பன்), கடல் அடியில் சுரங்கம், போன்ற ஒரு நாட்டிற்கு உச்ச பயனைப் பெறக்கூடிய துறையில் அனுபவமிக்க ஒருவரான இறக்காமம் மண் ஈன்றெடுத்த கிழக்கு மாகாணத்தின் முதலாவது கடற் பொறியியலாளர் எஸ். ஐ. மன்சூர் அவர்கள் காணப்படுகிறார்.
இவரின் நீள அகலமான சிந்தனையால் முன்னாள் அமைச்சர் மர்ஹூம். எம். எச். எம். அஸ்ரப் அவர்களின் கனவாக ஆரம்பிக்கப்பட்ட ஒலுவில் துறைமுகத்தைப் பாழடைய விடாமல் பக்குவமாய் பாதுகாத்து கிழக்குப் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புக்களையும் வழங்கி நாட்டை முன்னேற்றும் நல்ல சிந்தனையை கடந்த 2009 ஆம் ஆண்டு தன்னால் திட்டமிட்டு வரையப்பட்ட கடற்துறைப் பொருளாதார வளர்ச்சிக்கான செயற்றிட்டத்தின் அறிக்கைகளையும், கோப்புக்களையும் அன்றிருந்த அரசாங்கத்திடம் ஒப்படைத்து சட்டரீதியாக அனுமதி பெற சீரிய முயற்சியில் இறங்கியும் குறித்த அரசாங்கத்தில் இருந்த பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் அது பற்றிய பூரண அறிவின்மையால் அலைக்கழிக்கப்பட்டு வந்த நிலையிலும் கூட தான் எடுத்த முயற்சிகளைக் கைவிடக் கூடாது என்பதற்காக 2010 ஆண்டு ரியல் அட்மிரல் சரத் வீரசேகர அவர்கள் கடற்படையில் ஒன்றாக வேவை செய்த அறிமுகத்தைக் கொண்டு முன்னெடுக்க முனைந்தார்.
அக்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் களமிறங்குவதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்ட நிலையில் இருந்து சரத் வீரசேகரவோடு ஒன்று சேர்ந்து பயணித்தால் குறித்த விடயத்தை அரசியல் செல்வாக்கைக் கொண்டாவது வெல்ல முடியும் எனும் நோக்கத்தில் தனது நேரத்தையும் பொருளாதாரத்தையும் செலவு செய்தார். அதுவும் பயனளிக்கவில்லை
2015 ஆம் ஆண்டு அப்துல்லாஹ் மஃறூப் பிரதி அமைச்சராக இருந்த காலத்தில் பொறியியலாளர் மன்சூர் அமைச்சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவரின் கடற்பொருளாதாரம் தொடர்பான சிந்தனைக்கு அங்கேயும் நல்லதோர் சகுனம் கிடைக்காமையால் "ஒன்று நாடு முன்னேற வேண்டும் அல்லது நான் முன்னேற வேண்டும்" என்ற குறிக்கோளில் தனது முடிவினை மாற்றிக்கொண்டார்
பின்னர் சவுதி அரேபியாவில் ஜித்தா நகரில் காணப்படும் முன்னணி கப்பல் நிறுவனமொன்றில் தனது கடமையை ஆரம்பித்தார். நாட்கள் நகர்ந்தன. தற்போதுள்ள அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நீலப்பொருளாதாரம் (Blue Economy) குறித்து ஆராய்ந்து கடல் வளத்தின் மூலம் நாட்டை முன்னேற்றும் நோக்கத்தில் இது தொடர்பாக உலகிலுள்ள பல நாட்டிலுள்ள தூதுவராலயங்களினூடாக பல்வேறு கடல் பொறியியல் நிறுவனத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த அதே வேளை சவுதி அரேபியாவில் ஜித்தா நகரில் இருந்து இலங்கைக்கு கடல் பொறியியல் புத்திஜீவியாக எஸ். ஐ. மன்சூர் அவர்களுக்கும் இலங்கை அரசாங்கத்தினால் அழைப்பு விடுத்திருந்தார்கள். இவரை விமான நிலையத்தில் வைத்து செங்கம்பளம் விரித்து மிகவும் கௌரவமான ஓர் வரவேற்பை அளித்திருந்தார்கள் இலங்கை அரசாங்கத்தினர்.
இலங்கைக்கு வரும் வரை
எஸ். ஐ. மன்சூர் அவர்கள் ஒரு வெளிநாட்டுப் பிரஜை என நினைத்து அவருக்கு விசா வழங்குவதற்கு கடவுச்சீட்டைக் கோரிய போதுதான் இவர் இலங்கையர் எனும் விடயம் ஜனாதிபதி மட்டத்திலான குழுவினருக்குத் தெரியவந்துள்ளது.
பாருங்கள் "கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" எனும் சித்தாந்தம் பொறியியலாளர் மன்சூர் அவர்களின் கடந்த கால முயற்சிக்கு முட்டுக்கட்டையும் முடிச்சிகளும் போட்ட அரசியல் வாதிகளிடத்திலும் அரச அதிகாரிகளிடத்திலும் கடல் பொருளாதாரம் தொடர்பான பூரண அறிவும், தெளிவுமில்லை எனும் விடயத்தை இத்திட்டத்தை முன்னெடுத்த போது ஆர்வக்குறைபாடாக இருந்தவர்களால் வெளிக்காட்டப்பட்டிருந்தது எனலாம்.
கடந்த காலங்களில் பொறியியலாளர் மன்சூர் அவர்களின் திட்டங்களை மறுதலித்து பராமுகமாக இருந்த அரசியல் வியாதிகளுக்கும் (Political ills), அரச உயர் அதிகாரிகளின் கிணற்றுத் தவளை சிந்தனைக்கு அப்பால் இப்படியான ஒரு முற்போக்கான பொருளாதாரப் பார்வையும், கடல் வளங்களைப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டும் எனும் நல்லெண்ணமும் இவ் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என்பதும் ஒரு யுகமாற்றத்தின் விருத்தியே.