கம்பஹா காவல்துறை பிரிவுக்குட்பட்ட அகரவில பகுதியில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலை சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
14 வயதான குறித்த சிறுமி கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது தாய், நேற்று முன்தினம் இரவு கம்பஹா காவல்துறையினரிடம் முறைப்பாடளித்தார்.
அவர் காணாமல் போன சம்பவத்துடன் தமது இரண்டாவது கணவர் தொடர்புப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் சிறுமியின் தாய் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குறித்த தாயின் இரண்டாவது கணவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் வீடொன்றின் மலசலக்கூட குழியில் சிறுமியின் சடலத்தை மறைத்து அதனை மூடியதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடந்த 02.12.2024 அன்று தனது கணவன் அடகு வைத்த தங்க நகையை விடுவிக்க மகளிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு, அந்த தங்க நகையை விடுவிக்கத் தந்தையுடன் செல்லுமாறு கூறிவிட்டு மனைவி பணியிடத்திற்குச் சென்றுள்ளார்.
போதைக்கு அடிமையான கணவன், மகளிடம் தங்க நகைகளை வாங்கக் கொடுத்த பணத்தைக் கேட்ட நிலையில், மகள் மறுத்ததால், மகளைத் தாக்கி, பணத்தைப் பறித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்னர் வீட்டுக்கு வந்த அவர், மகள் தாக்கப்பட்ட இடத்திலேயே இறந்து கிடந்ததைக் கண்டு, சிறுமியின் சடலத்தை பொலித்தீன் பொதியொன்றில் போட்டு, கட்டி வீட்டின் கழிவறை குழியில் மறைத்து மூடியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, கழிவறை குழியில் போடப்பட்டிருந்த மகளின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றையதினம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 16ஆம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.