முன்னாள் அமைச்சர்களான அமீர் அலியும் சுபையிரும் மேற்கொண்ட பணிகள் பாராட்டத்தக்கது: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் புகழாரம்

0

 


பாடசாலை மாணவர்கள் ஆங்கில மொழியினைக் கற்றுக்கொள்வது அவசியம் எனவும் அதற்காக உதவுவதற்கு தான் தயாராக உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


மட்டக்களப்பு ஏறாவூர் அல் முனீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் ஸ்மார்ட் டிஜிட்டல் கற்றல் வகுப்பறையினை (03) திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் கட்டாயமாக ஆங்கில மொழியினைக் கற்றுக்கொள்ள வேண்டும். சிங்கள மொழியும் தமிழ் மொழியும் எமது தாய் மொழிகளாக இருந்தாலும் அதனோடு ஆங்கில மொழியினையும் கற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகும். ஆங்கில மொழியும் முக்கியமானதொரு மொழியாக திகழ்கின்றது.


நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்காலத்தில் தொழிநுட்பத்துறையின் மூலம் முறியடிக்கும் வகையில் கல்வி துறையை மாற்ற வேண்டும். இந்த நாட்டை இன, மத பேதமற்ற முறையில் ஒன்றுபடுத்தி வளப்படுத்துவேன் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நான் காலஞ்சென்ற ஜனாதிபதியின் மகன் என்ற வகையில் நாட்டைக் கட்டியெழுப்பும் உத்தரவாதத்தை உங்களுக்கு வழங்குகின்றேன் என்றும் கூறினார்.


முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினை நிறுவியதனால் அந்த வலயம் இன்று தேசிய ரீதியாக பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றது. அது மாத்திரமல்லாமல் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு அதிகமான வைத்தியர்களையும், பொறியியலாளர்களையும் இந்த வலயம் உருவாக்கியுள்ளது. அத்துடன் 350 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளையும் உருவாக்கியுள்ளதாக அறிந்துகொண்டேன். குறித்த வலயத்தின் சாதனைகள் குறித்து மகிழ்ச்சியடைவதுடன் முன்னாள் அமைச்சர் அமீர் அலியின் சேவையினையும் பாராட்டுகின்றேன்.


அதேபோன்று கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபைர் ஒரு வறிய குடும்பத்தில் பிறந்து மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து கொண்டாலும் அரசியல் அடையாளத்தினைப் பெற்று கிழக்கு மாகாண அமைச்சர் மற்றும் ஏறாவூர் நகர சபை தவிசாளர் என்கின்ற பொறுப்புமிக்க பதவிகளைப் பெற்று இந்த மண்ணிலேயே பெரும் பணிகளை செய்துள்ளதாகவும் அறிகின்றேன் அவரது சேவையினை பாராட்டுகின்றேன் அவரை வாழ்த்துகின்றேன். முன்னாள் அமைச்சர்கள் இருவரும் மக்கள் நலன்சார்ந்து மேற்கொண்ட பணிகள் பாராட்டத்தக்கது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஏறாவூர் அல்முனீரா பாலிகா மகா வித்தியாலய அதிபர் எம்.எம்.மஹாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, எஸ்.கணேசமூர்த்தி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபைர் எதிர்க்கட்சித் தலைவரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க சக்வல திட்டத்தின் ஊடாக 281வது ஸ்மார்ட் வகுப்பறை ஏறாவூர் அல் முனீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் ஆங்கில அகராதிகளை கொள்வனவு செய்வதற்காக ஒரு இலட்சம் ரூபா நிதியும் இந்நிகழ்வின் போது எதிர்க்கட்சி தலைவரினால் வழங்கி வைக்கப்பட்டது.





Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top