ஒற்றையாட்சிக்கு முடிவு கட்டுவதே தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு : சஜித்திடம் விக்கி சுட்டிக்காட்டு

Dsa
0

 


அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன் எனக் கூறும் நீங்கள் அதில் எவ்வாறான அதிகாரங்களைத் தரப் போகின்றீர்கள் என்று சஜித் பிரேமதாஸவிடம் கேட்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், காணி, பொலிஸ் அதிகாரங்கள் சம்பந்தமாக முழுமையான அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, விக்னேஸ்வரன் எம்.பியை நேற்று (12) சந்தித்துக் கலந்துரையாடினார்.


யாழ். நல்லூருக்கு அருகாமையில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.


13 ஆவது திருத்தச் சட்டம்


அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ்ப்பாணம் வந்துள்ள சஜித் பிரேமதாஸ என்னையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருவரும் பேசினோம். குறிப்பாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகத் தான் நடைமுறைப்படுத்தப் போவதாக அவர் கூறினார்.


தமிழ் மக்களுக்குத் தான் எதனைச் செய்யப் போகின்றேன் என்பதை எனக்குக் கூறிவிட்டு செல்வதற்காகவே என் வீட்டுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தான் எதனைத் தருவதாக வாக்குறுதி வழங்குகின்றேனோ அதனைத் தருவதற்குச் சகல முயற்சிகளையும் எடுத்து நிச்சயம் தருவேன் என்று அவர் கூறினார்.


ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு என்னவெனில் நாட்டில் இருக்கும் ஒற்றையாட்சி அரசமைப்பை முற்றாக மாற்றுவதுதான் என நான் கூறினேன்.


13 தருவேன், தருவேன் என்று மீண்டும் மீண்டும் கூறுகின்றீர்கள், எதனைத் தரப் போகின்றீர்கள்? எவ்வாறான அதிகாரங்களைத் தரப் போகின்றீர்கள்? என்று அவரிடம் நான் கேட்டேன்.


அத்தோடு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை என்னவாகக் கொடுப்பதாக நீங்கள் உத்தேசித்துள்ளீர்கள் என்பது சம்பந்தமாக முழுமையான ஓர் அறிக்கையை நீங்கள் வெளியிட்டீர்களானால் உங்களுடைய மனதிலே என்ன இருக்கின்றது என்பதைப் பற்றி நாங்கள் முழுமையாக அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் எனக் கூறினேன்." - என்றார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top