ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதனை கட்டுப்படுத்த அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடானது எதிர்வரும் மே முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
நுவரெலியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முறைசாரா அபிவிருத்தி காரணமாக நுவரெலியா நகரின் அழகு படிப்படியாக குறைந்து வருவதாகவும் இது சுற்றுலாத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, இப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சிக்கு தேவையான சூழலை உருவாக்கும் வகையில், விரிவான சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தை தயாரிப்பதற்கும், புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதனை ஒழுங்குபடுத்துவதற்கும் மத்திய மாகாண ஆளுநரின் தலைமையில் செயலணியொன்றை அமைக்கவும் அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது