நூருல் ஹுதா உமர்
இலங்கைப் பல்கலைக்கழக பொருளியலாளர்கள் மன்றத்தின் 45 ஆவது கூட்டம் வெள்ளிக்கிழமை (28) இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் கேட்போர் கூடத்தில் இலங்கைப் பல்கலைக்கழக பொருளியலாளர்கள் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் வரவேற்பு உரையினை கலை கலாசார பீடத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறைத்தலைவரும் இலங்கைப் பல்கலைக்கழக பொருளியலாளர்கள் மன்றத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான எஸ். சந்திரகுமார் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம் பாஸில் உரையாற்றினார்.
அவர் தனது உரையில், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் தென்கிழக்குப் பிராந்திய விவசாய, மீன்பிடி துறைகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கருத்து வெளியிட்டார். அத்துடன், பிராந்திய பொருளாதார மேம்பாட்டில் தென்கிழக்குப் பல்கலையின் வகிபாகதினை சான்றுகளுடன் முன்வைத்தார். தலைமை உரையினை இலங்கைப் பல்கலைக்கழக பொருளியலாளர்கள் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம் முஸ்தபா வழங்கினார்.
மேலும் பல வெளியீட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றதன. இதில் கலை கலாசார பீடத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையினால் “ஆய்வுச் சுருக்கத் தொகுப்பு – தொகுதி 02, 2022” வெளியிடப்பட்டது. மேலும் கலை கலாசார பீடத்தின் “கலம் ஆய்விதழ் தொகுதி - 15” வெயிளிடப்பட்டது. “வணிகப் பொருளியல் ஆய்விதழ்” முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் முகாமைத்துவ துறையினால் வெளியிடப்பட்டது.
இக்கூட்டத்தின் பிரதம அதிதி உரையினை இலங்கை தென்கிழக்குப் பல்லைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் நிகழ்த்தினார். உபவேந்தர் தனது உரையில் சமகால இலங்கையில் பொருளாதார பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கு வெளிநாட்டு நாணய நிதியத்தின் உதவியானது பெரும் பங்கை வகிக்கின்றது என்பதனை சிலாகித்துப் பேசினார். மேலும்இ தற்கால பொருளாதார நெருக்கடி சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்க பல்கலைக்கழக பெருளியல் நிபுணர்கள் முக்கிய பங்களிப்பு செய்யவேண்டும் என்பதனை வலியுறுத்தினார். மேலும், இலங்கைப் பல்கலைக்கழக பொருளியலாளர்கள் மன்றத்தின் பணியின் அவசியம் குறித்தும் கருத்து வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் நெதர்லாந்து சமூக கற்கைகள் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் கலாநிதி ஹாவாட் நிக்கலஸ் முதன்மைப் பேச்சாளராக நிகழ்நிலை தொழிநுட்பத்தினூடாக கலந்து சிறப்பித்தார். இவர் தனது உரையில் இலங்கையின் நாணயமாற்று வீத நெருக்கடி பற்றி ஆய்வினடிப்படையில் மிகவும் தெளிவாக பேசினார். மேலும் நாணயமாற்று வீதத்துக்கான வெளிநாட்டு நாணய நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்வுகள் பற்றியும் மிகவும் தெளிவாகப் பேசினார். இறுதியாக கூட்டத்தில் நன்றியுரையினை பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.ஏ.எம் நுபைல் வழங்கினார்.
இந்நிகழ்வில் இலங்கைப் பல்கலைக்கழக பொருளியலாளர்கள் மன்றத்தின் ஸ்தாபகர் பேராசிரியர் குணரூபன், இலங்கை பல்கலைகழகங்களின் பெருளியல் துறை நிபுணர்கள், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், நுலகர், துறைத்தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், சிரேஷ்ட உதவிப் பதிவாளர், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், போதனைசாரா ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.