இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற சகலதுறை வீரர் இம்ரான் பட்டேல் (35), திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புனேவின் கார்வாரே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த கிரிக்கெட் லீக் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார் இம்ரான் பட்டேல்.
சில ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய இம்ரான், தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், இடது கையில் வலி இருப்பதாகவும் நடுவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரை ஓய்வெடுக்க செல்லும்படி நடுவர் அறிவுறுத்தி உள்ளார்.
இதையடுத்து, இம்ரான் பெவிலியன் நோக்கி திரும்பி சென்றார். ஆனால், சிறிது துாரம் சென்ற உடனே மைதானத்துக்குள்ளேயே அவர் சுருண்டு விழுந்தார்.
அதைக் கண்ட பிற வீரர்கள் உடனடியாக அவரை நோக்கி ஓடினர். அவசர அழைப்பாக நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு இம்ரான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற மற்றொரு வீரர் நசீர் கான் நிருபர்களிடம் கூறுகையில், ‘இம்ரான் நல்ல உடல் கட்டுடன் இருந்தார். அவருக்கு இதுவரை எந்த உடல் பிரச்னையும் ஏற்பட்டதில்லை.
இந்த நிலையில் மாரடைப்பால் அவர் இறந்தது அதிர்ச்சிகரமாக உள்ளது. இம்ரானுக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்’ என்றார்.
இம்ரான் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி முழுவதும் வீடியோ கெமராவால் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் இறந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பாக பேசப்பட்டது.
இம்ரான், கிரிக்கெட் டீமை உருவாக்கி நடத்தி வந்தவர். பழரசக் கடையும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தவர். இம்ரானின் இறப்பு உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அவரது இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலங்கிய கண்களுடன் பங்கேற்றனர்.