அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்மாந்துறை, பசார் 7ஆம் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று திங்கட்கிழமை மாலை கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கட்டட வேலைக்காக மண்ணைப் பயன்படுத்தும்போதே குறித்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டவர்களில் கைக்குண்டைக் கண்டதாகக் கூறப்படும் நபர் உடனடியாக 119 எனும் பொலிஸ் அவசர பிரிவுக்குத் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டுடை பார்வையிட்டதுடன், கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக குண்டு செயலிழக்கும் விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றவியல் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் கட்டளையைப் பெற்று கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழப்பு செய்யவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்ப்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.