கிழக்கு ஆளுநரது பிரத்தியேக நியமனங்களில் முஸ்லிம் ஒருவர் இல்லை!

 


முன்னாள் எம்.பி இம்ரான் கவலை


கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆளுநரினால் நியமித்த அவரது பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம் ஒருவர் இல்லாதது மிகவும் கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும், முன்னாள் எம்.பியுமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.


கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 


கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, சமீபத்தில் அவரது பிரத்தியேக ஆளணியில் பிரத்தியேக செயலாளர், பொதுசன தொடர்பு உத்தியோகத்தர், ஊடகச் செயலாளர் என 3 நியமனங்களைச் செய்துள்ளார். இந்த நியமனங்களில் முஸ்லிம் ஒருவரும் உள்வாங்கப்படாமை எனக்கு மிகவும் கலையைத் தருகின்றது. 


கிழக்கு மாகாணம் 3 இனங்களும் வாழும் மாகாணம். இதில் முஸ்லிம்கள் கனிசமான தொகையினர். எனவே, இம்மாகாண முஸ்லிம்களது கலாசார பாரம்பரியங்கள் அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநர் தெரிந்து கொண்டால்தான் சகலருக்கும் நீதியான சேவையை வழங்க முடியும். 


இவ்வாறான நிலையில் ஆளுநரது பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம் ஒருவர் இருந்தால் அவருக்கு முஸ்லிம்கள் தொடர்பான தேவையான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். குறைபாடுகளை தவிர்த்துக் கொள்ளக் கூடிதாக இருக்கும். தற்போது அந்தச் சந்தர்ப்பம் ஆளுநருக்கு இல்லாமல் உள்ளது. 


கிழக்கு மாகாண ஆளுநர் நல்ல மனிதர். கல்விமான். பல்கலைக்கழக மட்டத்தில் நியாயமான முறையில் சேவை வழங்கியுள்ளார். என்றெல்லாம் நான் அறிந்துள்ளேன். அவர் வகித்த முன்னைய பதவிகள் அனைத்தும் அலுவலகம் சார்ந்த பதவிகள் அதனால் அவரால் எவ்வித தலையீடும் இன்றி சுதந்திரமாக பணியாற்ற முடிந்தது.


எனினும் தற்போது அவர் வகிப்பது அரசியல் ரீதியான பதவி. வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொருத்த வரையில் இங்கு இனரீதியான அரசியல் ஊறிப்போயுள்ளது. இந்நிலையில் அரசியல்வாதிகள் தங்களது கோரிக்கைகளை வெல்வதற்காக அடுத்த இனத்தை குறைகூறும் பண்பு இருப்பதை கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் நான் அவதானித்துள்ளேன். இதனால் முஸ்லிம்களுக்கு அநீதி இடம்பெற்ற சம்பவங்களும் உண்டு.


இந்நிலையில் முஸ்லிம்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படும்போது அதன் உண்மைத் தன்மையை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்கு நம்பிக்கை மிகுந்த ஒருவர் அளுநரது அருகில் இருப்பது அவசியமென நான் கருதுகின்றேன். அவ்வாறான ஒருவர் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவராய் இருந்தால் கூட பரவாயில்லை.


எனவே, இந்த விடயங்களை ஆளுநர் கவனத்தில் கொள்ளவேண்டும். அவரது நியாயமான செயற்பாடுகளுக்கும், எமது கட்சியும் நாட்டு மக்களும் எதிர்பார்க்கும் சிறந்த மாற்றத்திற்கும் இது உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section