இந்தியாவின் பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் யூடியூப்-இலுள்ள வீடியோக்களின் உதவியுடன் பித்தப்பைக் கல் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அஜித் குமார் என்பவர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இரவு கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து சரண் பொலிஸ் கண்காணிப்பாளரான குமார் ஆஷிஷ் கூறுகையில், “இறந்தவர் சரண் மாவட்டத்தின் பூவல்பூர் கிராமத்தைச் சேர்ந்த கோலு எனும் கிருஷ்ண குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்களின் தகவலின் பிரகாரம், கோலு சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் சரணிலுள்ள தர்மபாகி பஜாரிலுள்ள ஒரு தனியார் கிளினிக்குக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்
கோலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அஜித் குமார் என்பவர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து பித்தப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சையை இவருக்கு மேற்கொண்டுள்ளார். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு கோலுவின் நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து அவரை பாட்னாவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த செப்டம்பர் 07 ஆம் திகதி கோலு என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து யூடியூப்பில் வீடியோக்களைப் பார்த்து அறுவைச் சிகிச்சை செய்ததாக குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இறந்தவரின் தாத்தா, "அஜித் குமார் யூடியூப்பில் வீடியோவைப் பார்த்து எனது பேரனுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதை நான் நேரில் பார்த்தேன். பித்தப்பை கல் அகற்றும் அறுவைச் சிகிச்சை செய்வதாக அவர் எங்களிடம் தெரிவிக்கவும் இல்லை. அதற்கான அனுமதியும் பெறவில்லை. கோலுவின் உடல் நிலைமை மோசமானதையடுத்து அவர் பாட்னாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே கோலு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக குடும்பத்தினர் கடந்த செப்டம்பர் 07 ஆம் திகதி பொலிஸில் அளித்த புகாரின் பேரில் அஜித் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யூடியூப் மூலம் தவறான அறுவைச் சிகிச்சை செய்ததால் சிறுவனின் உயிர் பறி போன சம்பவம் குறித்த பகுதியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.