அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளைக் கொண்டுசெல்லும் பணிகள் நிறைவு

 



20 Sep 2024 இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நாளை (21) நடைபெறவுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் இன்று (20) காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது.


இம்மாவட்ட வாக்கெண்ணும் நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் இருந்து வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன. 


வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.


இத்தேர்தல் மாவட்டத்தில் 528 வாக்களிப்பு நிலையங்களில் 555,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 


அதன்படி அம்பாறை தொகுதியில் 188,222 பேர், சம்மாந்துறை தொகுதியில் 99,727 பேர், கல்முனை தொகுதியில் 82,830 பேர், பொத்துவில் தொகுதியில் 184,653 பேர் வாக்களிக்கவுள்ளனர்.


மேலும், அம்பாறை மாவட்டத்தில் அம்பாறையில் 184 வாக்களிப்பு நிலையங்கள், சம்மாந்துறையில் 93 வாக்களிப்பு நிலையங்கள், கல்முனையில் 74 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் பொத்துவில் தொகுதியில் 177 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இதேவேளை தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


இதன்போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிஸார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 


இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன.


அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.


வாக்களிப்பு நிலையத்தில் செப்டம்பர் 21ஆம் திகதி காலை 07 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்படும். பிற்பகல் 04 மணிக்கு வாக்களிப்பு நிலைய வரிசையில் தரித்து நிற்கின்ற வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை பிற்பகல் 04 மணிக்கு பின்னர் வாக்களிப்பு நிலையத்தினுள் உட்பிரவேசிக்க இடமளிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section