ஜனாதிபதித் தேர்தல் யாருக்கு சாதகமாக அமையப் போகின்றது?

 



ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் மிக விரைவில் நடைபெறவிருக்கிறது. இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் சவால் மிக்க ஒன்றாக மாறியிருக்கிறது. யார் வெல்வார்? யார் தோற்பார்? யார் வெற்றி பெறக்கூடிய சாத்தியம் அதிகம் இருக்கின்றது? என்ற கேள்விகளே ஒவ்வொருவருடைய சிந்தனைகளிலும் எழுந்த வண்ணமிருக்கின்றன. 


அண்மைக் காலங்களில் கொரோனா தொற்றையடுத்து தடைப்பட்ட பொருளாதார நெருக்கடியால் நாடு வங்குரோத்து காணும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்து. கட்டுடைத்த காளையாக யாருடைய கட்டுக்கும் அடங்காமல் பொருளாதார ரீதியாக பாரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு தடுமாறிய நாட்டை, முன்னைய ஜனாதிபதியாக இருந்த கோத்தாபய ராஜபக்‌ஷ அவர்களால் கட்டுக்குள் வைத்து தனது ஆட்சியை காப்பாற்ற முடியவில்லை என்பது யாவரும் அறிந்ததே. நாடு திரண்ட போராட்டமும் மக்களின் கொந்தளிப்பையும் அடுத்து கோத்தாபய ராஜபக்‌ஷ நாட்டின் தலைமைப் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக துரத்தியடிக்கப்பட்டிருந்தார். 


இப்பேற்பட்ட நிலையில் துடுப்பின்றிய படகாக இந்து சமுத்திரத்தின் மத்தியில் தத்தளித்துக் கொண்டிருந்த நாட்டைப் பொறுப்பெடுத்து கரை சேர்ப்பதற்கு தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர யாருமே முன்வராத நிலையே காணப்பட்டது. அவ்வாறே நாட்டைப் பொறுப்பெடுத்தாலும் கூட குறுகிய காலத்துக்குள் இலங்கையை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்டெடுக்க முடியுமா? என்ற கேள்வி அநுர குமார முதற்கொண்டு சஜித் பிரேமதாஸ வரை அனைவருக்கும் கேள்விக் குறியாகவே இருந்திருக்கும். ஒருவேளை, அவ்வாறு பொறுப்பேற்றுக் கொண்டாலும், நாடு இருக்கின்ற பொருளாதார நிலையையும் தாண்டி இன்னும் மோசமான நிலையை மக்கள் எதிர் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டால் இருக்கின்ற பெயரும் கெட்டு விடும். அதன் பின்னர் அதிலிருந்து மீண்டு வருவது கடினமானதாக மாறி விடும் எததிர்கால அரசியல் கள நடவடிக்கைகளுக்கு முட்டுக் கட்டையாக மாறி விடும். . 


இப்படியொரு இக்கட்டான நிலைமையில்தான் அதள பாதாளத்தில் சிக்கியிருந்த நாட்டை ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்று ஓரளவு முன்னேற்ற நிலைக்கு கொண்டு வந்தார். இந்த முயற்சியானது யாரும் எதிர்பாராத திருப்பமாகவும் அவருக்கு மாறி விட்டது. பின்னர், இதனை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு, “நாட்டை தானே மீட்டெடுத்தேன். பொருளாதாரக் கஷ்டத்தை நீக்கினேன்” என மார் தட்டிக் கொண்டு தற்போது ஆட்சியதிகாரத்தில் நீடிப்பதற்காக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கி கடுமையான பிரசாரங்களை ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்றார்.  


மற்றுமொரு கண்ணோட்டத்தில் கோத்தாபய ராஜபக்‌ஷவின் பரம்பரைப் பின்னணியில், அத்தனை சவால்களை எதிர் கொண்டு நாமல் ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார். 30 வருட கால யுத்தத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்தோம், இழுத்துப் பிடித்தோம், கட்டிக் காத்தோம் என்று காலங்காலமாக பேசுகின்ற அதே வசனக் கோர்வைகளோடு தனது வாக்கு வங்கியை நிரப்புவதற்காக நாமல் காத்திருக்கிறார். கோத்தாபய ராஜபக்‌ஷவை ஆட்சியை விட்டே துரத்தியடித்த மக்கள் நாமல் ராஜபக்‌ஷவை எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளப் போகிகிறார்கள் என்பது தெரியவில்லை. “மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படும், 05 வருடங்களில் 10 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்பது முதற்கொண்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு விசாரணைக்குழு அமைக்கப்படும்” என்று பல திட்டமிட்ட கருத்துக்களை நாமல் ராஜபக்‌ஷ முன்வைத்து வருகின்றார். 


எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸவும் எக்கச்சக்கமான வாக்குறுதிகளை கைவசம் வைத்துக் கொண்டே அலைகிறார். இவருடைய வாக்கு பலம் ஆரம்பத்தில் கொஞ்சம் செல்வாக்காக இருந்த போதிலும் கூட, அதே நிலை தற்போதும் நீடிக்குமா? என்பதை சந்தேகக் கண் கொண்டே பார்க்க வேண்டியிருக்கிறது.  தன்னுடைய அப்பாவான முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவைப் போன்று சஜித் பிரேமதாஸ ஒன்றும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் அல்ல. அவ்வப்போது  வெளிப்படுகின்ற அவருடைய பேச்சில் தெளிந்த தன்மையில்லாத நிலையை ஏற்படுத்தப் பார்க்கிறார். அவருடைய பேச்சும், போக்கும் சிறுபிள்ளைப் பேச்சாக தோன்றி மறைகின்றது. என்னதான் சஜித் பிரேமதாஸ தனக்கு, தனது தந்தையின் வாக்கு வங்கியாக அடித்தள மக்களின் வாக்குகளும், வடக்கு, கிழக்கு முதற்கொண்டு மலையக மக்களின் வாக்குகள் இருப்பதாக நினைத்தாலும்கூட அது எந்தளவு சாத்தியம் என்பது தெரியவில்லை.   


அத்தோடு, தேசிய மக்கள் சக்தியிலிருந்து அநுர குமார திஸ்ஸாநாயக்க “பூரணத்துவம் மிக்கதோர் அரசியல் மாற்றம் காண வேண்டும்” என்ற ஒற்றை லெடிமேட் வாசகத்தோடு ஆட்சியைப் தக்க வைப்பதற்காக நீண்ட காலமாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். தேசிய மக்கள் சக்தியானது தன்னை “தேசிய மக்கள் சக்தி” என்று பிரகடனப்படுத்திக் கொண்டாலும் கூட, இவர்களெல்லாம் ஜே.வி.பி.யின் பின்புலத்தில் வளர்ந்தவர்கள் என்ற கருத்தும் சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக முன்வைக்கப்படுகின்றது.  1988 – 1989 இல் இடம் பெற்ற கிளர்ச்சி தற்போதைய தேர்தல் காலங்களில் தூசு துடைக்கப்பட்டு புதிய செய்தி போல சமூக வலைத்தளங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றது. அதனுடன் போனஸ் செய்திகளாக, 1980 ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிப்பு, 1981 இல் யாழ் நூலகத்துக்கு தீ வைப்பு, 983 இல் இடம் பெற்ற ஜுலை கலவரம் என ஏட்டிக்குப் போட்டியாக பல முன்னைய சம்பவங்கள் தொடர்ந்தேர்ச்சையாக முன்வைக்கப்பட்ட வண்ணமேயிருக்கின்றது. என்னதான் இவையெல்லாம் புதிது புதிதாக கை, கால்கள் முளைத்து எழுந்தாலும் , இவையெல்லாம் பெரும்பான்மை மக்களிடம் பெரிதாக எடுபடவில்லை.  


இப்போதைக்கு இத்தேர்தலில் பிரதானமாக ரணில் விக்கிரமசிங்க, அநுர குமார திஸ்ஸநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பெயரே பரவலாக அடிபடுகின்றது. நாமல் ராஜபக்‌ஷவின் பெயரை கேட்பதற்கு ஆசையாக இருக்கிறது என்ற கதையாகி விட்டது. வாக்குகள் பெரும்பான்மையாக மூன்றாகப் பிரிந்தாலும் கூட, ராஜபக்‌ஷ குடும்பத்தின் வாக்குகளும் சொற்ப அளவில் பிரிந்து செல்லலாம். வாக்குகள் மூன்று அல்லது நான்கு துண்டுகளாகப் பிரிந்து செல்கின்றமையானது, குறித்த வேட்பாளர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் இடியாப்பச் சிக்கலை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு தேர்தலிலும் இவர் வெல்வார், இவர் தோற்பார் என்ற அபிப்பிராயம் பொதுமக்களுக்குள் எழுவதுண்டு. அது சாதாரணமானதுதான். ஆனாலும், பெரும்பாலான மக்களின் ஊகம் பெரும்பாலும் சரியானதாக இருக்கும். சில மக்களுடைய சிந்தனைகள் பொய்த்தும் போகலாம். அது வேறு விடயம். ஆனால், இம்முறை நடைபெறுகின்ற ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக அனைத்து வேட்பாளர்களுக்கும் சவால் மிக்க பலப் பரீட்சையாகவே இருக்கப் போகின்றது என்பதை தெளிவாகத் தெரிகின்றது.  



ரணில் விக்கிரமசிங்கவும், சஜித் பிரேமதாஸவும் கட்சி ரீதியாக பிளவுபட்டு தனித்தனி பாதையில் பிரிந்து கீரியும் பாம்புமாக பயணித்தாலும் கூட, இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே கூட்டில் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள்தான். நாட்டின் பொருளாதார நிலை ஆரம்பத்தில் சாதாரண பிரச்சினையாக உருவெடுத்திருந்த சமயத்தில் சஜித் பிரேமதாஸவுக்கும், அநுர குமார திஸாநாயக்கவுக்கும் மக்கள் பலம் இருப்பது போன்ற நிலை காணப்பட்டாலும், அது இப்போதும் இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு பொருளாதாரத்தில் சிக்குண்ட பின்னர், ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற போது ரணிலுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஆதரவு இருக்கவில்லை. ஆனால், பொருளாதார சிக்கலிலிருந்து நாட்டை மீட்டெடுத்த போது அது அவருக்கு தானாகவே உருவெடுத்திருக்கிறது என்றவொரு கருத்தும் நிலவி வருகின்றது. இந்நிலையிலேயே சஜித் பிரேமதாஸ மற்றும் அநுர குமார திஸ்ஸாநாயக்க மற்றும் கோத்தாபயவின் பக்கமிருந்த வாக்கு வங்கியிலுள்ள வாக்குகள் ரணிலுடன் சேர்த்து சமப்படுத்தல் தராசில் கூடிக் குறைந்து கொண்டிருக்கின்றது. இந்த இடத்தில் வாக்கு அதிகரிப்பது தொடர்பில் ‘இல்லை’ என்ற கருத்தை எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளர்களோ முன்வைத்தாலும்கூட அக்கூற்று எந்தளவுக்கு தாக்குப் பிடிக்கும் என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. 


ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது வேறு வழிகள் எதுவுமின்றி மக்களின் பரிகாசத்திற்கும், சலிப்புக்குமுள்ளான பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களோடு கைகோர்த்திருக்கிறார். அது மட்டுமன்றி நூற்றுக்கும் அதிகமான பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் பலர் ராஜபக்‌ஷ கூட்டத்திலிருந்து விலகி, தற்போது ரணிலுடன் ஒட்டுச் சேர்ந்திருக்கிறார்கள். 


அத்தோடு, முன்னைய ஜனாதிபதித் தேர்தல்களிலெல்லாம் இனவாதமே பெரும்பாலும் பேசுபொருளாய் உருவெடுத்திருக்கும். ஆனால், இம்முறை அப்படியொரு தேவை யாருக்கும் இருக்கவில்லை. 2022 ஆம் அண்டு இடம் பெற்ற ‘அரகலய’ போராட்டத்தின் பின்னர் பொருளாதார முனைப்பு ஒன்றே கேள்விக் குறியாக மாறியுள்ளது. நாட்டின் ஜனாதிபததியாக வருகின்ற ஒருவர் நாட்டை கட்டியெழுப்பி மக்களின் மனங்களில் சுபீட்சத்தை ஏற்படுத்துபவனாக இருக்க வேண்டும் என்பதே தேவையாக எழுந்துள்ளது. இப்பேற்பட்ட நிலையில் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னரும் கூட எந்த ஒருவருக்கும் ஜனாதிபதியின் கதிரை பஞ்சுமெத்தையோ, பருத்திப் போர்வையோ கிடையாது. அது ஒரு முள் படுக்கைதான். ஏனைய வேட்பாளர்கள் இலங்கை பொருளாதாரத்தில் சிக்குண்டிருந்த போது செய்ய முன்வராததை இனிவரும் ஆட்சியாளர்கள் எந்தளவுக்கு செய்து முடித்து நாட்டை முன்னிறுத்துவார்கள் என்பதும் தெரியவில்லை. ரணில் ஓரளவு பொருளாதாரத்தை நிறுத்தி நங்கூரமிட்டு வைத்திருக்கிறார். அவ்வளவுதான். தண்ணீரில் மிதக்கும் பொருளாதாரக் கப்பல் இன்னும் கரை வந்து சேரவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு, ஏனையோரை விடவும் சர்வதேச அரங்கில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்ற செல்வாக்கை குறைத்து எடை போடவும் முடியாது. ஒப்பீட்டளவில் ரணில்தான் வெல்வார் என்று சொல்வதற்கும் இல்லை. வென்றாலும் ஆச்சர்யம் கொள்வதற்குமில்லை. இதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. நாடு பொருளாதாரத்தில் சிக்கி அதள பாதாளத்தில் தள்ளப்பட்ட பின்னர், நிறைய குடும்பங்கள் நிரந்தர வறுமையாளர்களாக அடையாளம் கொள்ளப்பட்டனர், இறக்குமதிப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. இதனால் நிறைய தொழிற்சாலைகள் மூடு விழா கண்டன, கடந்த இரண்டு வருடங்களில் பல இலட்சம் மக்கள் நாட்டை விட்டு ஓட்டம் கண்டனர், பால், மீன், முட்டையில் ஆரம்பித்து பெரும்பாலான பொருட்களைக் கூட இறக்குமதி செய்கின்ற நிலைப்பாடே உருவெடுத்துள்ளது. 


2020 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி வந்த சஜித் பிரேமதாஸ சிலருடன் கூட்டணி சேர்ந்து கொண்டு பயணப்படுகின்றார். அந்த கூட்டணியில் வடக்கு கிழக்கில் பாரிய வாக்கு வங்கி தனக்கு இருப்பதாக சஜித் கனவு கண்டு கொண்டிருகின்றார். ரணிலும் கிட்டத்தட்ட அவ்வாறான நிலையில்தான் இருக்கிறார். ஒரே கட்சியிலிருந்து வெவ்வேறு பாதையில் தனக்கான பங்கை பிரித்துக் கொண்டு செல்கின்ற தலைமகனைப் போல இவர்கள் இருவருடைய நிலைமையும் மாறி விட்டது. இது கிட்டத்தட்ட அநுர குமாரவுக்கு சாதகமாகி விட்டது. தற்போதே வென்று விட்ட எண்ணத்தில் அடுத்த கட்டத்துக்குள் இறங்கி விட்டார்கள். 


யார் வந்தாலும் போனாலும், மக்களின் முன்னாலுள்ள தேவைகள் ஒன்றுதான். அதனை எதிர்கொள்கின்ற ஜனாதிபதிதான் மக்களின் ஒரே தேவையாக இருக்கின்றது. பொருளாதார ரீதியாக சுபீட்சம் காணப் போராடுகின்ற, நாட்டை காக்கப் போராடுகின்ற வினைத்திறன் மிக்க தலைவர் வர வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணமாக இருக்கின்றது. வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் யாருக்கு சாதகமாய் அமையப் போகின்றது என்பதை காண்பதற்கு இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்திருக்க வேண்டும்.


-நஸார் இஜாஸ் -

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section