ஒரு பெண்ணால் ஆணின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியமைக்க முடியும் என்பதற்கு இந்தக் கதை சிறந்த உதாரணமாகும்.
இந்த புகைப்படத்தைப் பாருங்கள். இது 2019 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது.
அந்தக் காலத்தில் கலேவெல நகரிலுள்ள மாலை நேர வகுப்பு (Tution) நடக்கும் நிலையத்தின் சூழலில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் குமார் ஐயா (அண்ணா) என எல்லோராலும் அழைக்கப்படுகின்ற குமார.
பொதுவாக குமாரவினால் யாருக்கும் எந்த தொந்தரவும் எப்போதும் இருந்ததில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் என் சுது நோனாவை (காதலியை) பார்த்தீர்களா? என்று அருகில் நின்று கொண்டிருக்கும் இளைஞர்களிடம் அவர் கேட்பார். அவ்வளவுதான். அப்படி அவர் கேட்கின்ற போது அவரை பார்த்தால் பாவமாக இருக்குமே தவிர, யாருக்கும் அவர் மேல் வெறுப்பு இருக்காது.
குமார சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்திருந்தார். அப்பெண் அவரை விட்டு விலகிச் சென்றதல் குமார இந்நிலைக்கு ஆளாகி விட்டார். ஒரு பெண்ணின் மீதான அளவு கடந்த காதல் அவரை பைத்தியமாகும் அளவுக்கு கொண்டு சென்று விட்டது.
காலப் போக்கில் குடும்பத்தினரும் அவரை கை விட்டு விட்டனர். கால் போன போக்கில் திரிந்து கொண்டிருந்தவரை இன்னொரு பெண்ணின் வருகை முழுமையாக மாற்றி விட்டது.
தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வருபவர் சயூரி. ஒரு நாள் இரவு 8.30 மணியளவில் கடைசிப் பேருந்தை தவற விட்டு விட்டு, பேருந்து இல்லாமல் இலங்கையின் கலாவெவ பிரதேசத்திலுள்ள ஒரு சாலையின் ஓரத்தில் காத்துக் கொண்டிருந்தாள் அவள்.
சுற்றி இருள் படர்ந்திருந்தது. கொஞ்சம் கிராமப் புறத்தின் சாயல் அத்தெருவில் இருந்தது. நடமாட்டம் நன்றாகவே குறைந்திருந்த வேளை அது. ஒரு இளம் பெண் தனியாக சாலை ஓரம் நின்று கொண்டிருப்பதை கண்ட ஓரிருவர் அவளை அடுத்த நொடியே சுற்றி வளைக்க முற்பட்டனர்.பாதுகாப்பதற்காக அல்ல. அவளை கேலி செய்வதற்காகவே.
அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த சயூரி என்ற பெண்ணை சிலர் இளைஞர்கள் கேலி செய்வதைப் பார்த்த குமார, இளைஞர்களை விரட்டி விட்டு சயூரியின் வீட்டார்கள் வந்து அழைத்துச் செல்லும் வரை அவ்விடத்தில் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தான்.
நாட்கள் மெல்லக் கடந்தன. இச்சம்பவத்துக்குப் பிறகு சயூரி குமாரவை காண்கின்ற போதெல்லாம் பேசி விட்டுச் செல்வாள். குமாரவின் மீது சயூரிக்கு கொஞ்சம் பரிவு ஏற்பட்டது. இது இப்படியே தொடர்ந்தது.
பரிவு, பாசம் என்பன நாளடைவில் நட்பாக மாறியது. குமாரவின் பைத்தியக் குணம் மெல்ல மெல்ல தெளிந்தது. குமாரவை முழுமையாக மாற்றியது. அந்த நட்பு காதலாக மாறியது. ஒரு பெண்ணின் காதலால் பைத்தியமானவன், மறு பெண்ணின் காதலால் குமார காதலால் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பினான்.
சயூரியும் குமாரவும் திருமணம் செய்து கொண்டனர். தாம்பத்திய வாழ்க்கையில் இணைந்தனர். பைத்தியமாக இருந்த குமார தற்போது இலங்கையின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவர். சயூரி அவருடைய அன்பு மனைவியாக இருக்கிறார்.
சயூரி என்ற பெண் அன்று குமாரவின் வாழ்க்கையில் வந்திருக்கவில்லையென்றால், அவர் இன்றும் அவரது காதலியை தேடிக் கொண்டு சாலை ஓரமாக 'பைத்தியம்' என்ற பட்டத்தோடு அழைந்து கொண்டிருப்பார்.
தற்செயலாக நம் வாழ்வில் வருகின்ற சிலர் தேவதையாக வந்து நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றி விடுகிறார்கள். இது போன்ற மாற்றங்கள் அவ்வப்போது இருப்பதால்தான் உலகத்தின் வாழ்க்கையும் அழகாக இருக்கிறது.
தமிழ் மொழியாக்கம்:
கயல்விழி