ஜனாஸா எரிப்புக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பு கூற வேண்டும்!

 


கொவிட் ஜனாஸா எரிப்பு தொடர்பில் பிரதான தொற்று நோய் நிபுணரை கொண்டு விசாரணை குழு ஒன்றை அமைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் (21) பாராளுமன்றில் இடம்பெற்ற உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“.. விஞ்ஞான ரீதியற்ற முறையற்ற ரீதியில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டிருந்தது. அதற்காக அரசாங்கம் மன்னிப்பு கேட்டிருந்தது. அதனை பாராட்டுகின்றோம். அதனால் எந்த ஒரு திணைக்கள ரீதியான விசாரணையும் இடம்பெறவில்லை. எந்த ஒரு ஆதாரமும் இல்லாத ஒரு பயங்கரமான தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆகவே முழு முஸ்லிம் சமுதாயமும் பயங்கரமாக பாதிக்கப்பட்டது. ஆகவே நான் உங்களுக்கு ஒரு கடிதம் ஒன்று எழுதியிருக்கின்றேன். சுகாதார அமைச்சில் உள்ள பிரதான தொற்று நோய் நிபுணரை கொண்டு குழு ஒன்றை அமைக்குமாறு நான் வேண்டிக்கொள்கிறேன். விஞ்ஞான முறையற்ற முறையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்க்கள் எரிக்கப்பட்டது. இது முறையாக விசாரிக்கப்பட வேண்டும்..” என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இருக்க அண்மையில் தேர்தல் பிரசார மேடையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனும் ஜனாஸா எரிப்பு குறித்து பேசியிருந்தார். அன்று அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கை உயர்த்தி வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஜனாஸா எரிப்பு விடயத்தில் அன்று அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கை உயர்த்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமா பொறுப்புக் கூற வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுவது நியாயமானது. பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹகீம் ரிஷாத் பதியுதீன் இவர்களும் ஜனாஸா எரிப்புக்கு பதில் கூறியே ஆக வேண்டும். தேர்தல் மேடைகளில் மக்கள் உணர்வுகளை தூண்டும் வகையில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சுயநல அரசியலில் இப்போது ஜனாசாக்களை பேரம் பேசுகின்றனர்.

சுமார் 300 இற்கும் அதிகமான ஜனாசாக்கள் கொவிட் மரணங்கள் என எரிக்கப்பட்டன. அதனை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கும் ஒவ்வொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு பதில் கூற வேண்டும். அன்று சுயநலமற்ற அரசியலில் ஈடுபட்டிருக்காது முஸ்லிம் எம்பிகள் ஒன்றாக சேர்ந்திருந்தால் இவ்வளவு ஜனாசாக்கள் எரிக்கப்பட்டிருக்காது.

இறுதியில் அந்நாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலையீட்டினால் ஜனாஸா எரிப்பு நிறுத்தப்பட்டதாகவும் அப்போது இந்நாட்டுக்கு வந்திருந்த இம்ரான் கான் கையில் ரிஷாத் பதியுதீனின் மகன் ஜனாஸா எரிப்புக்கு எதிர்புத் தெரிவித்து கடிதம் வழங்கியமை இவைகளால் தான் ஜனாஸா எரிப்பு முடிவுக்கு வந்ததாக வியாக்கியானம் பேசித் திரிவதாலோ ஜனாஸா எரிப்புக்கு எதிராக இப்போது மேடைகளில் தொண்டை கிழியப் பேசும் ஹகீம் ரிஷாத் போன்ற அரசியல்வாதிகளால், எரிக்கப்பட்ட ஜனாசக்கள் எரிக்கப்படவில்லை என்றாகிடுமா? எரிக்கப்பட்ட ஜனாசாக்களினை வைத்து அரசியல் செய்வது தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் கைமாறா என்பது புரியாத புதிராக இருக்கின்றது.

கொரானா ஜனாஸா எரிப்பும் அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கை உயர்த்தியவர்கள் என்பது இரு காரணிகள். அவற்றினை முடிச்சுப் போட்டு மேடைகளில் கூவுவது எந்த வகையில் அரசியல் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அது இல்லாது சுமார் 300 ஜனாசாக்கள் எரிக்கப்பட்ட போது அந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காவது ஆதரவாக எமது முஸ்லிம் எம்பிக்கள் இருந்தார்களா என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரியும். ஜனாஸா எரிப்பானது இப்போது முஸ்லிம் வாக்குகளை குறியாக வைத்து முன்வைக்கப்படும் ஒரு இன்றியமையாத அரசியல் காய்நகர்த்தலாக மாறியுள்ளது

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section