புத்தளம் (Puttalam) - வென்னப்புவ பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே நேற்று (18) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், உயிரிழந்த பெண் கடந்த 09 வருடங்களாக தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முதல் இலங்கை வந்துள்ளார்.
கருத்து முரண்பாடு
இலங்கை திரும்பிய குறித்த பெண் தனது வீட்டிற்கு வருகை தந்து மூன்று நாட்கள் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் தங்கிய நிலையில் , கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனையடுத்து, 11 ஆம் திகதி தனது பிள்ளையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கடந்த 7 ஆம் திகதி குறித்த பெண் மீண்டும் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிச் செல்ல தயாரான போது, பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இங்கேயே தங்கியிருக்குமாறு கணவன் தனது மனைவியிடம் கூறியுள்ளார்.
மேலதிக விசாணை
தனது பேச்சை நிராகரித்த மனைவி தன்னுடன் வாக்குவாதப்பட்டதாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தான் சமையலறையில் இருந்த பெற்றோலை எடுத்து மனைவியின் உடல் மீது ஊற்றி தீவைத்ததாகவும் கணவன் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய உயிரிழந்த பெண்ணின் கணவரான 43 வயதுடைய நபர் நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்வம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாணைகளை முன்னெடுத்துள்ளனர்.