இந்தியாவின் கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரங்களின்படி, 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் 1.89 லட்சம் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் 1.91 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.79 லட்சம் வழக்குகளில், பாலியல் வன்கொடுமை செய்தவர் தெரிந்த நபராக உள்ளார். இந்தியாவில் சராசரியாக தினமும் 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் 82 வழக்குகளில் பாலியல் வன்கொடுமை செய்தவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரிந்த நபராக உள்ளார்.
சொல்லப்போனால் இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கு 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகிறது. மேலும், இந்தியாவில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களே அதிக அளவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர். 1.89 லட்சம் வழக்குகளில், 1.13 லட்சம் பெண்கள் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட வயதை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.