ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம் மக்களும் -03

 



கலாநிதி றவூப் ஸெய்ன்


 முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள்.


மத பண்பாட்டு சுதந்திரங்களும் உரிமைகளும்


2019 இல் பயங்கரவாதி ஸஹ்ரான் கட்டவிழ்த்த கொடூர பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்கள் மிகுந்த நெருக்குவாரங்களையும் அவமானங்களையும் சந்தித்தனர்.அதே நெருக்கு வாரங்கள் இன்று  வரைத்தொடர்கிறது என்பது ஆச்சரியமளிக்கின்றது. மிகப்பெரிய தாராண்மை வாதியும் ஜனநாயகவாதியுமான ரணிலின் ஆட்சியிலும் கோட்டாவின் ஆட்சியில்  நடாத்தப்பட்டதுபோலவே முஸ்லிம்கள் தமது மத கலாசார விவகாரங்களில் நடாத்தப்படுகின்றனர். இதை நாம் உணர்கிறோமா?


எல்லா மதத்தினரும் தமது மதம்சார் தர்மோபதேசங்களை சுதந்திரமாக நடாத்தலாம். ஆனால் முஸ்லிம்கள் எந்த நிகழ்ச்சி செய்தாலும் அது பற்றிய அறிக்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு அடுத்த கணமே வர வேண்டும். வளவாளர் யார் அவர் என்ன சொன்னார் என்பதை அப்பிரதேச புலனாய்வு அதிகாரிகள் சென்று துருவி ஆராய வேண்டும் என்பதான ஒரு உளவியல் யுத்தம் முஸ்லிம் சமூகத்தின் கல்வி பொருளாதார கலாச்சாரத்துறை வளவாளர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. எவனோ ஒருவனின் அரசியல் தேவைக்காகவே பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்பட்டது என்பதை முழு உலகுமே வெளிப்படுத்திய பின்னரும் ஏன் முஸ்லிம்கள் மீது இத்தகைய உளவியல் யுத்தம் நீடிக்க வேண்டும்?


இந்த நாட்டிலுள்ள எந்த மதத்தவரும் சேர்ச் கட்டலாம். கோயில் கட்டலாம் . பண்சலை கட்டலாம்.ஆனால் முஸ்லிம்கள் மட்டும் புதிதாக பள்ளி கட்ட முடியாது. மத்ரஸா ஆரம்பிக்க முடியாது. என்ற எழுதப்படாத சட்டம் நாட்டில் நடைமுறையில் உள்ளது.இது பாரிய இனவேறுபாடும் துவேஷமும் இல்லையா? முஸ்லிம் சமூகம் மாத்திரம் ஏன் இப்படி ஓரங்கட்டப்பட்டு உரிமை மறுக்கப்படுகின்றனர்.? அரசியல்வாதிகளே இந்தப்பிரச்சினையைப்பேசுவது உங்களுக்கு முக்கியமாகப்படவிலையா?


இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.குர்ஆன் பிரதிகளைக்கூட கொண்டுவர முடியாது. ஆயிரத்தெட்டு ஒழுங்குகளுககுப்பின்னரே அவற்றை துறைமுகத்திலிருந்து மீட்க முடியுமாக உள்ளது என்றால் அதன் அர்த்தம் என்ன? சமய கலாசார ரீதியில் விதிக்கப்பட்டுள்ள இந்தக்கட்டுப்பாடுகள் ஏன் இன்னும் தளர்த்தப்படவில்லை. 


ஞானசாரரின் வெறுப்பும் பேச்சு இந்த நிமிடம் வரை தொடர்கிறது. அது இனங்களின் குறிப்பாக முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து அவர்களை மைய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்துகின்றது. ரணில் கூட ஒரு கூட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தின் மீது அரசாங்கம் விதித்த சில கட்ட்ப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படவில்லை என்று பகிரங்கமாக கூறி இருந்தார்.


இந்த விவகாரம் முஸ்லிம் அரசியல் வியாபாரிகளுக்கு முக்கியமாகத் தோன்றவில்லையா? இதை விட புதிய ஜனாதிபதி வேட்பாளருடன் பேரம் பேச என்னதான் இருக்கிறது? தமது கள்ளத்தனமான பேரம் பேசலில் இந்த விவகாரம் ஏன் உள்ளங்கவில்லை. என் அருமை கிழக்கு முஸ்லிம்களே சிந்தியுங்கள் .முஸ்லிம் காங்கிரஸோ அடுத்த முஸ்லிம் கட்சிகளோ எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் ஒரு  தும்புத்தடியை வேட்பாளராக நிறுத்தினாலும் கூட அதற்கும் புள்ளடி பொட்டுப் பழகி இருக்கும் நமது மக்களே சிந்தியுங்கள்.


சமூகத்தை விற்றுப்பிழைக்கும் அரசியல் வியாபாரிகளே! உங்கள் திருட்டுப்பேரம்பேசலில் இந்த விவாகாரம் இடம்பெற வாய்ப்பே இல்லை என்பது வரலாறு. 


கேட்பதற்கு என்னிடம் ஆயிரம் கேள்விகள் உள்ளன. கேள்விகள் தொடரும்.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section