மஹ்ரூப் முஹிதீன் எனும் அருமையான ஆளுமை

 



கலாநிதி றவூப் ஸெய்ன்


எனக்கு 2000 களின் ஆரம்பத்தில் அறிமுகமான ஓர் அரிய ஆளுமை நண்பர் மர்ஹூம் மஹ்ரூப் முஹிதீன் அவர்கள். தோராயமாக கால்நூற்றாண்டு உறவு அவருக்கும் எனக்கும் இடையிலானது. அது இனிமையானது. சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர் தொலைபேசி ஊடாக உரையாடினேன். இந்த நாட்களில்  SLBC பக்கம் செல்லவில்லை என்பதால் அவரை நேரடியாகக் கண்டு கன காலமாகிறதே என்ற ஆதங்கத்தில் தான் தொலைபேசியில் அழைத்தேன். மற்றொன்று முஸ்லிம் சேவையில் அவருடன் இணைந்து செய்த "கருத்துக்களம்" நிகழ்ச்சிகள் குறித்து முகநூலில் எழுத ஆரம்பித்த இந்த நாட்களிலேயே அவர் நம்மை விட்டும் சடுதியாக மறைந்து விட்டார்.


சடுதியான மரணங்கள் நமக்குத்தரும் பாடங்கள், படிப்பினைகள் அனந்தம்.

மஹ்ரூப் முஹிதீன் அமைதியானவர். கொழும்பு தந்த கலைஞர்களிலேயே வித்தியாசமானவர். ஆர்ப்பாட்டமில்லாதவர். விளம்பர வெளிச்சத்தில் நனையும் ஆர்வம் அவரிடம் மிக அரிது. கொழும்பில் இடம்பெற்ற எனது நூல் வெளியீட்டு விழாக்கள் எல்லாவற்றுக்கும் போல் அறிவிப்பாளராக அவரை நான் அழைத்துள்ளேன். 


ஆனால் அவர் எதற்கும் சமூகம் தரவில்லை.என்னுடன் மிக நெருக்கமான அவர் ஏன் வேறு வேறு காரணங்களைச் சொல்லி பின்வாங்குகின்றார் என்று யோசித்தபோது எனக்குள் தோன்றிய ஒரே விஷயம் அவர் வெளி நிகழ்ச்சிகளுக்கு (out door) செல்வதை முற்றிலும் தவிர்த்து வருகிறார் என்பதுதான். SLBC ற்கு வெளியே புகழைச்சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு மண்ணளவும் இருக்கவில்லை.


2004 ஆம்ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு  வரை சுமார் 500 க்கு மேற்பட்ட கருத்துக்களத்திலும் உலகளாவிய முஸ்லிம் உம்மாவிலும் அவர் எனது நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் சில போது ஒலிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். முஸ்லிம் உலக விவகாரங்களிலும் முஸ்லிம் உம்மாவின் விவாகாரங்களிலும் ஆழ்ந்த அக்கறையும் அனுதாபமும் கவனமும் அவருக்கிருந்ததை நான் அருகிலிருந்து அவதானித்திருக்கிறேன். 


பாலஸ்தீன் பற்றியும் காஷ்மீர் பற்றியும் திரும்ப திரும்ப நாங்கள் பேசியிருக்கிறோம். சூடான் அல்ஜீரியா எகிப்து என்பவை குறித்தும் ஆழமாக ஆராந்திருக்கிறோம். எல்லாமே அவரது விருப்பமாக இருந்தது. செச்னியா பொஸ்னியா கொசோவோ என்று என்னைத்துளைத்தெடுத்தவர் அவர். அவ்வளவு ஆர்வமிகுதி அவருக்கு.


சின்னச்சின்ன விஷயங்களில் தலை போடாத, வேண்டாத விடயங்களில் மூக்கு நுழைக்காத, யாரைப் பற்றியும் குறைகள் பேசாத, நல்ல பண்புகளை நான் அவரிடம் அவதானித்திருக்கிறேன். நல்ல பண்பாடும் (cultured) ஒழுங்குக் கட்டுப்பாடும் (diciplined ) மிகுந்த நண்பர் மஹ்ரூப் முஹிதீன்  அடுத்தவர்களுடன் அன்பாகவும் பண்பாகவும் பழகக்கூடியவர். ஹமீத் அல்ஹுஸைனியின் பழைய மாணவர். நாளிர் சேர் பேன்றோரின் மாணவர்.2005 இல் நடந்த என் திருமணத்திற்கு அன்பளிப்பு டன் வந்து என்னை கௌரவப் படுத்தியவர்.


வானொலித் துறையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலான அனுபவம் கொண்ட அவரது மரணம் உண்மையிலேயே முஸ்லிம் சேவைக்கு பேரிழப்பாகும். ஆழ்ந்த இஸ்லாமிய உணர்வுள்ள நண்பர் மஹ்ரூப், இஸ்லாமிய அறிவை தேடுவதில் பேரார்வம் மிக்கவர். சிறந்த மார்க்கத்தெளிவுடனும் பற்றுடனும் வாழ்ந்து மரணித்த அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவரது மறுமை வாழ்வை ஜெயம்பெறச்செய்வானாக.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section