அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட எல்.முஹம்மட் இர்பான் அவர்கள் இன்று காலை தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
நேற்று காலை 10.00 மணிக்கு சபைக்கு வருகை தந்த புதிய செயலாளரை அட்டாளைச்சேனை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மாலை அணிவித்து வரவேற்று அழைத்து சென்றமை விசேட அம்சமாகும்.
புதிய செயலாளர் வரவுப்பதிவேட்டில் கையொப்பமிட்டதன் பின்னர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை எனக்கு புதிய சபையல்ல. இங்கும் நான் செயலாளராகக் கடமையாற்றியிருக்கின்றேன்.சிறப்பாக செயல்படக்கூடிய உத்தியோகத்தர்கள் இங்குள்ளதை நான் அறிவேன்.
கடந்த காலங்களைப்போல் இச்சபையை சிறப்பாக கொண்டு செல்வதற்கு உங்களது முழுமையான ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றேன்.
செயலாளர் ஒருவரால் மாத்திரம் பிரதேச சபையை முன்னெடுக்க முடியாது. சகலரும் ஒன்றித்து செயற்படும்போதுதான் வெற்றிகரமான சேவையை மக்களுக்கு வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அக்கறைப்பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் தமது வாழ்த்துக்களையும் புதிய செயலாளருக்கு தெரிவித்துக் கொண்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு எட்டு வருடங்களின் பின்னர் சுப்ரா தரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் செயலாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.