S.M.Z.சித்தீக்
கடந்த காலத்தில் நிலவிய யுத்தச் சூழநிலை காரணமாக வட கிழக்கு மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மட்டுமன்றி அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தன. மேற்படி காலப்பகுதியில் வட கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள பல பாடசாலைகளில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவியது. எனவே, மேற்படி பாடசாலைகளில் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சு இந்த நிலைமையை இனங்கண்டதோடு, அவ் அமைச்சின் கீழ் காணப்பட்ட சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு மத்தியிலிருந்து தகைமைவாய்ந்தவர்களை மேற்படி பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக தற்காலிக அடிப்படையில் இணைப்புச் செய்வதற்கு அப்போதைய சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகமாக இருந்த ரியர் அத்மிரால் கலாநிதி சரத் வீரசேகர அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டார்.
மேற்படி அலுவலர்களுள் வட மாகாணத்தில் கடமையாற்றிய தற்காலிக ஆசிரியர்கள், அப்போதைய கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களினால் 2019 ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானமொன்றுக்கு அமைய வட மாகாண ஆசிரியர் சேவைக்கு இணைப்புச் செய்யப்பட்டனர்.
கிழக்கு மாகாண அலுவலர்கள் இன்றளவிலும் சிவில் பாதுகாப்பு அலுவலர்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு ஆசிரியர்களாக சேவையாற்றி வருவதோடு, அவர்களுக்கு எந்தவொரு சிறப்புரிமையும் இதுவரை வழங்கப்படவில்லை. அவர்களையும் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இக் கௌரவ சபைக்குப் பிரேரிக்கின்றேன் என கௌரவ சட்டத்தரணி எஸ். எம். எம். முஷர்றப் (பா.உ.) அவர்களினால் இன்று (2024.05.13) ஆம் திகதி தனது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளார்.