(ஆதிப் அஹமட்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்தியத்தில் உள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள உணவு கையாளும் நிறுவனங்களும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் உள்ள அறுகம்பே சுற்றுலா வலயம் மற்றும் பொத்துவில் நகர் பகுதியில் உள்ள சகல உணவு கையாளும் நிறுனங்களிலும் புதன்கிழமை (29) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கல்முனை பிராந்திய சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பீ.மோகனகாந்தன், பிராந்திய சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள், பொத்துவில் மற்றும் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்தே குறித்த திடீர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
பொத்துவில் நகர் பகுதி உள்ளிட்ட அறுகம்பே சுற்றுலா வலயத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் உல்லாச ஹோட்டல்கள் என்பவற்றில் இடம்பெற்ற திடீர் பரிசோதனைகளின் போது சுகாதார விதிமுறைகளை மீறிய 8 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழுதடைந்த உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
பொத்துவில் பிரதேசத்தில் வாழும் பொது மக்களுக்கும் அறுகம்பே பிரதேசத்துக்கு வருகின்ற உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் சுகாதாரமிக்கதும், தரமானதுமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலே குறித்த உணவு கையாளும் நிறுவங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி உவைஸ் தெரிவித்தார்.