ஆண்களின் பாலின உறுப்புகளில் ஒன்று, விதைப்பை. இதுவே, ஆண்களின் இனப்பெருக்கத்துக்குத் தேவையான விந்தணுக்களை உற்பத்தி செய்யும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், விதைப்பையினுள் `மைக்ரோ பிளாஸ்டிக்' (Microplastics) எனப்படும் சிறு சிறு பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
பிரேதப் பரிசோதனையின்போதும், கருத்தடை அறுவை சிகிச்சையின்போதும் சேகரிக்கப்பட்டிருந்த 23 ஆண்களின் விதைப்பை மாதிரி செல்கள் மற்றும் 47 வளர்ப்பு நாய்களின் விதைப்பை மாதிரி செல்களையும் பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டனர். சோதனையின் முடிவில், அனைத்து விதைப்பையிலும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு நாயின் விதைப்பையினுள் 122.63 மைக்ரோகிராம் அளவும், மனிதனின் விதைப்பையினுள் 328.44 மைக்ரோகிராம் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதில், 12 வகையான பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் அட்டவணைப்படுத்தியுள்ளனர். அதில், பாலிஎத்திலீனால் உருவான பிளாஸ்டிக் துகள்கள் அதிக அளவு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து நியூ மெக்சிகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் சியோசங் யூ பேசுகையில், ``வாய்வழியாக மற்றும் தோலில் இருக்கும் துளைகள் மூலம் உடலினுள் மைக்ரோ பிளாஸ்டிக் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இவை, மனித இனப்பெருக்க மண்டலத்தை சென்றடையுமா என்ற கேள்வி எங்களுக்குள் இருந்தது.
இதனைக் கண்டறியவே இந்த ஆய்வை மேற்கொண்டோம். நாய்களின் விதைப்பையில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதைவிட மூன்று மடங்கு அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் மனிதனின் விதைப்பையினுள் கண்டறியப்பட்டது எங்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. பிளாஸ்டிக் துகள்கள் உடல் உறுப்புகளில் படிவதால் தொற்றுநோய், உறுப்புச் செயலிழப்பு, வளர்சிதை மாற்ற கோளாறு, டிஎன்ஏ சேதம் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
இவை, விதைப்பையினுள் இருப்பதால் விந்தணு உற்பத்தியையும் பாதிக்கலாம். விந்தணுக்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பரவலாம். ஆண்களின் விதைப்பைகளில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதால் இனப்பெருக்கத்திறன் குறைவது, விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். இது எதிர்காலத்தில் குழந்தையின்மைப் பிரச்னைகளைத் தீவிரமாக்கும் வாய்ப்பு உள்ளது.
இனப்பெருக்க மண்டலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் இருக்குமான என்பதற்கான ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை எந்த அளவு இனப்பெருக்க மண்டலத்தையும், விந்தணு உற்பத்தியையும் பாதித்துள்ளத என்பது குறித்து இனிதான் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியமானது என்பதால் உடனடியாக அதற்கான முயற்சிகளைத் தொடங்க இருக்கிறோம்" என்றார்.