.
உமர் அறபாத் - ஏறாவூர்
தொழிற்சாலைகள் மற்றும் தொழில் தளங்களில் பணிபுரியும் இளைஞர் யுவதிகளுக்கான பாலியல் சமத்துவம் மற்றும் பெண்களுக்கான கொள்கைகள்,
உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று மட்டக்களப்பு நாவற்குடா சிவநேசராசா உள்ளக அரங்கில் "பெண்களுக்காக நாம்" அமைப்பில் ஏற்பாட்டில் 18/05/2024 சனிக்கிழமை அன்று அமைப்பின் இணை நிறுவனர் பாஹீம் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்விற்கு வளவாளர்களாக
சமூக செயற்பாட்டாளர் ஜே.எம்.அஸீம் மற்றும் சமூகப்பணி மற்றும் கலைமானி பட்டப்படிப்பு மாணவர் எம்.பீ.எம்.றிப்னாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பான தெளிவூட்டலை கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு வழங்கினர்.
தொழிற்சாலை மற்றும் தொழில்புரியும் நிலையங்களில் பெண்களுக்கான வன்முறைகள்,பாலியல் சேட்டைகள்,
அச்சறுத்தல்கள்,
ஊதியம் மறுக்கப்படல்,
அடிப்படை உரிமைகள் நசுக்கப்படல் போன்ற விடயங்களுக்கு ஆளாகும் போது சட்டரீதியாக எவ்வாறு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற விடயங்கள் வளவாளர்களினால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
கடந்த இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டு மார்ச் எட்டாம் திகதி சர்வதேச பெண்கள் தினத்தன்று மகளிர் ,சிறுவர் அலுவல்கள் மற்றும் பெண்களின் வலுவூட்டல் பற்றிய தேசிய கொள்கை இலங்கையில் பிரகடனம் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் மற்றும் தொழிற்துறைகளில் ஈடுபடுவோரும் கலந்து கொண்ட மேற்படி விழிப்புணர்வு கருத்தரங்கில் தான் எதிர்காலத்தில் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற அறிவினை தாம் பெற்றுக்கொண்டதாக கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
பெண்களுக்காக நாம் அமைப்பு தேசியரீதியில் இன்னும் பல தொடரான சமூகத்திற்கு பயன் அளிக்கக்கூடிய விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.