தனியார் தொழில்முனைவோருக்கு அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும் : ஜனாதிபதி தெரிவிப்பு

 


செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கை விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதோடு இதில் ஆர்வமுள்ள தனியார் துறை தொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.




இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கேகாலை நெலுந்தெனிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வேகா காரை உருவாக்கிய ஹர்ஷ சுபசிங்கவின் பசுமை இல்லத்தைப் பார்வையிடுவதற்காக நேற்று (17) சென்றபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


விவசாய நவீனமயமாக்கல்

மேலும் தெரிவிக்கையில், “விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது எதிர்கால பசுமைப் பொருளாதாரத்தின் அடையாளமாகும்.



இத்தகைய தனியார் தொழில்முனைவோரின் வழிகாட்டுதலின் கீழ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரிவான விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை நாட்டில் செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.




இதன்படி இவ்வருடம் 100 பிரதேச செயலாளர் பிரிவுகளை நவீன விவசாயத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தின் கீழ் 25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 75 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் தேவையான வசதிகள் வழங்கப்படும்.


உணவு உற்பத்தி

தனியார் தொழில்முனைவோருக்கும் இந்த திட்டத்தில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது.இதற்குத் தேவையான பயிற்சி மற்றும் நிதி வசதிகளை அரசாங்கம் வழங்க திட்டமிட்டுள்ளது.


அதிகரித்து வரும் சனத்தொகைக்கு இணையாக உணவு உற்பத்தியும் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைந்த அளவு நிலத்தில் அதிக அறுவடையைப் பெற வேண்டும். அதற்கு நவீன விவசாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும்.



தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் நாட்டில் பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என நான் நம்புகிறேன்” என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கனக ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் உதயகாந்த குணதிலக்க, கேகாலை மாவட்டச் செயலாளர் ரஞ்சன் ஜயசிங்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஹர்ஷ சுபசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section