ஐ.நாவின் கட்டமைப்பு தோல்வி : பாதுகாப்பு சபையில் மத்திய கிழக்கின் நாடொன்றுக்கு அங்கத்துவம் வழங்கப்பட வேண்டும்

0



நூருல் ஹுதா உமர் 


ஐரோப்பா கண்டத்திற்கும், ஆசிய கண்டத்திற்கும், அமெரிக்க கண்டத்திற்கும்  ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமை இருக்கும் போது ஆபிரிக்க கண்டத்துக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் 70 வருடங்களுக்கு மேல்  ஏன் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமை வழங்கவில்லை. அந்த நாடுகளை ஓரவஞ்சனை செய்து ஓரங்கட்டி வைத்திருக்கும் நிலையில் அந்த நாடுகளில் உள்ள மக்களை கொன்று குவிக்கும் போது இனிமேலும் வேடிக்கை பார்க்காது சக்திமிக்க நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஐ.நா பாதுகாப்பு சபையில் நிறைவேற்று அதிகாரமிக்க நிரந்தர உறுப்புரிமையை மத்திய கிழக்கின் நாடொன்றுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளை சமாதானத்தை விரும்பும் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தினார். 


பாராளுமன்றத்தில் நேற்று (14) உரையாற்றிய அவர். தொடர்ந்தும் அங்கு உரையாற்றும் போது, 


றபா பிரதேசத்தில் மில்லியன் கணக்கான மக்களை சுற்றி வளைத்து வதைமுகாம் போன்று சாப்பாடு, தண்ணீர் எதுவும் வழங்காமல் இஸ்ரேலிய ராணுவம் கொடுமைப் படுத்தி வருகிறது. மட்டுமின்றி நிராயுதபாணியான அப்பாவி மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் ஆயுதங்களினால் தாக்குதல் மேற்கொள்கிறது. அதை கண்டிக்க முடியாதவாறு மனித உரிமை பேசும் அமைப்புக்களும், சர்வதேச தலைவர்களும் மௌனியாக இருக்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் இஸ்லாமிய நாட்டின் தலைவரான எகிப்திய ஜனாதிபதி கூட இஸ்ரேலிய இராணுவம் றபா பிரதேசத்தில் உள்நுழைய உடந்தையாக இருந்து அங்கு இடம்பெறும் பலஸ்தீனியர்களின் கொலைகளுக்கு பங்குதாரராக மாறியிருக்கிறார். 


மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை மரண தண்டனை வழங்கி கொன்ற எகிப்திய ஜனாதிபதி இன்று இஸ்ரேலின் காவடி எடுத்து ஆடுகிறார். நீதியை போதிக்கும் நிறுவனங்கள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், மனித உரிமை பேரவை போன்றன மௌனித்து விட்டது. ஐ.நாவின் கட்டமைப்பு தோல்வியடைந்துள்ள நிலையில் ஐ.நாவின் கட்டமைப்பை மறுசீரமைக்க உலகநாடுகள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இன்று அமெரிக்காவும், ஜெர்மனும், பிரித்தானியாவும் பாதுகாப்பு சபையின் மறுசீரமைப்பை பற்றி பேசுகிறது. உலகில் அதிக சனத்தொகை கொண்ட இந்தியாவுக்கு நிறைவேற்று அதிகாரமிக்க நிரந்தர அங்கத்துவம் பாதுகாப்பு சபையில் வழங்கப்பட கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. 


56 நாடுகளின் கூட்டிணைவான இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம் (OIC) அதைவிட பல மடங்கு சனத்தொகை கொண்டுள்ளது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கென்று இந்த பாதுகாப்பு சபையில் அங்கத்துவம் வழங்கப்பட வில்லை. அதனை உறுதிப்படுத்தி ஐ.நா பாதுகாப்பு சபையில் நிறைவேற்று அதிகாரமிக்க நிரந்தர உறுப்புரிமையை மத்திய கிழக்கின் நாடொன்றுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளை சமாதானத்தை விரும்பும் உலகத்தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top