எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி களத்தில் உயிரை துறக்க விரும்புவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட 16 வயது சிறுவனை பிரான்ஸ் நாட்டு தீவிரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிஸில் எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளை சேர்ந்த சுமார் 10,500 வீர,வீராங்கனைகள் தொடக்க விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
செய்ன் ஆற்றின் கரையில் இந்த விழாவை கோலாகலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக வழக்கத்தை விடவும் பாதுகாப்பு விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது பிரான்ஸ் அரசு.
பாதுகாப்பில் பங்களிக்க சுமார் 45 அயல் நாடுகளின் உதவியை பிரான்ஸ் அரசு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில்தான் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன், தனது டெலிகிராம் பதிவில் ‘ஒலிம்பிக் விளையாட்டு போட்டி களத்தில் உயிரை துறக்க விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
அதையடுத்து நேற்றைய தினம் அவரை பொலிஸார் கைது செய்தனர்.
தற்போது அவரிடம், இதன் பின்னணியில் தீவிரவாத சதி ஏதேனும் உள்ளதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.