சிற்றாமுட்டி முழுத்தாவரம் துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. வறட்சியகற்றும்; பாரிசவாயு போன்ற கடுமையான வாதநோய்களைக் கட்டுப்படுத்தும். வீக்கத்தைக் கரைக்கும்; ஆறாத புண்களை குணமாக்கும். தலை, உடலுக்கு குளிர்ச்சியுண்டாக்கும் தைலவகைகளில் இது சேர்கின்றது.
1.5 மீ. வரை உயரமாக வளரும் சிறு செடி வகைத் தாவரம். சிறு கிளைகளில் ஒட்டும் இயல்புடைய மெல்லிய உரோமங்கள் காணப்படும். பல்லுள்ள 3 சிறு மடலான இலைகள், முட்டை வடிவமானவை.
மலர்கள், வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறம், காய்கள், உருண்டை வடிவமானவை. விதைகள், மென் உரோமங்கள் கொண்டவை. இலங்கை, அந்தமான் தீவுகளில் இயற்கையில் ஏராளமாக விளைகின்றது. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது.
குறுந்தட்டி என்ற மாற்றுப் பெயரும் உண்டு. செடி முழுவதும் மருத்துவப் பயன் கொண்டது. உலர்ந்த செடிகள் நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
மூட்டுவலி, வாத நோய்கள் குணமாக 100 கிராம் சிற்றாமுட்டி வேரை சேகரித்து, கழுவி, காயவைத்துக் கொண்டு, இலேசாக இடித்து, ½ லிட்டர் நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டி, கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, வலியுள்ள இடத்தில் பூசிவர வேண்டும்.
தலைவலி குணமாக 10 கிராம் சிற்றாமுட்டி வேரை நன்கு சுத்தம் செய்து கொண்டு, 1 லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சி, ½ லிட்டராக சுண்டவைத்து வடிகட்டி வேளைக்கு 1 டம்ளர் வீதம் 2 வேளைகள் குடிக்க வேண்டும்.
புண்கள் குணமாக பசுமையான சிற்றாமுட்டி இலைகளை தேவையான அளவு அரைத்து காயங்களின் மீது பூச வேண்டும்.
தலைக்குளிர்ச்சிக்கான தைலம்:
சிற்றாமுட்டி வேர்ப்பொடி 400 கிராம் 3 லிட்டர் தண்ணீரில் இட்டு ¾ லிட்டராக சுண்டக்காய்ச்சி அதில் சுக்கு மிளகு ஏலக்காய் வெட்டிவேர் வகைக்கு 20 கிராம் எடை அரைத்துப் போட்டு நல்லெண்ணெய் 1 லிட்டர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு வாரம் இரு முறைகள் தேய்த்துத் தலைமுழுகிவர வேண்டும்.
பேராமுட்டி: பிசுபிசுப்பான இலைகளைக் கொண்ட குறுஞ்செடிகள். 1 மீ. உயரமானவை. சிறு கிளைகள் ஒட்டும் உரோமங்கள் கொண்டவை. இலைகள் முட்டை வடிவமானவை, 3 மடல்களாகப் பிரிந்தவை.
கஸ்தூரி மஞ்சளின் மணத்தைப் போன்ற வாசனை இந்தச் செடியின் இலைகளில் உள்ளது. இலைக்கோணத்தில் பூக்கள் காணப்படும். செந்தொட்டி என்கிற பெயரும் உண்டு. தமிழகமெங்கும் தரிசு நிலங்களில் தானே வளர்கின்றது.
வேர்கள் மருந்துவப்பயன் கொண்டவை. இவை துவர்ப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. சிறுநீர் எரிச்சல், மாந்தம், இடுப்புவலி, வாத நோய்கள் போன்றவற்றைக் குணமாக்கும்.
காய்ச்சல், மிகுதாகம், மிகுவியர்வை, சீதபேதி இவற்றைக் குணப்படுத்த 20 கிராம் வேரை நசுக்கி 1 லிட்டர் நீரில் இட்டு 100 மி.லி. அளவாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து 50 மி.லி. வீதம் காலை மாலை உள்ளுக்குச் சாப்பிட்டுவர வேண்டும்.