சட்டவிரோதமான முறையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதோடு, தற்போது வெளிநாட்டில் உள்ள ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு தமது பிரிவுக்கு அறிவிக்காமல் சேவையில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட இரண்டு இலங்கை இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் அதிக சம்பளத்தை எதிர்பார்த்து ரஷ்ய இராணுவத்தில் இணைவதற்கு தயாராகி வருவதாகவும், அல்ஜசீரா செய்தி வெளியிட்டு, சில நாட்களிள் பின்னர், பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் அறிவித்துள்ளது.
அந்த அறிக்கை வெளியிடப்பட்ட உடன், ரஷ்ய இராணுவ சீருடை அணிந்த ஒரு குழுவினர் சிங்களத்தில் உரையாடிக்கொண்டிருக்கும் காணொளி சமூக ஊடகங்களில் அதிக கவனத்தை ஈர்த்தது.
“ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவத்திற்கு சேவையாற்ற, இலங்கை இராணுவ வீரர்களை அனுப்ப இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையே எந்த உடன்பாடும் இல்லாத பின்னணியில், இதுபோன்ற சம்பவங்கள் நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும்” என பாதுகாப்பு அமைச்சு ஏப்ரல் முதலாம் திகதி கூறியிருந்தது.
சட்டரீதியில் விலகமால் சென்ற முப்படை வீரர்கள்
அதன்பின்னர் நேற்று (ஏப்ரல் 03) ஊடக ஒன்றை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சு, சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலமாக, 2024.04.20ஆம் திகதி முதல் 2024.05.20ஆம் திகதி வரையான ஒரு மாதத்தை அறிவித்துள்ளது.
"இந்த பொது மன்னிப்புக் காலத்தில் விலகிக்கொள்பவர்கள் சட்டப்பூர்வமாக சேவையிலிருந்து நீக்கப்படுவார்கள், ஏதேனும் செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருப்பவர்கள் மாத்திரம் அதை சட்ட ரீதியில் விளகிக்கொள்வதற்கு முன்னர் செலுத்த வேண்டும்.” என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
“இந்த பொது மன்னிப்பானது 2024.04.02ஆம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் தொடர்பில் மாத்திரம் செல்லுபடியாகும்.”
தற்போது வெளிநாட்டில் இருக்கும் முப்படையினரும் விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படையினரும் இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது மீண்டும் பிரிவுக்கு சமூகமளிக்காமல் சட்டரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கு அனுமதி வழங்குவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதன் முதல் நிபந்தனை என்வெனினின், விடுப்பு இல்லாமல் பணிக்கு வரத் தவறியதைத் தவிர வேறு எந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளும் நிலுவையில் இருக்கக்கூடாது என்பதாகும்.
இரண்டு இலங்கை இராணுவத்தினர் உயிரிழப்பு
அவர்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு சென்றவர்களாகவோ அல்லது கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை மோசடியாக தயாரித்து வெளிநாடு செல்லாதவர்களாகவோ இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய வெளிநாட்டுப் கற்கைநெறிகள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களால் முப்படைகளுக்கு வழங்கப்படும் கற்கைநெறிகள் மற்றும் இராஜதந்திர பணிகள் அல்லது வேறு ஏதேனும் தேவைகளுக்காக வெளிநாடு சென்று உரிய காலப்பகுதிக்குள் நாடு திரும்பத் தவறியவர்களுக்கு இந்த பொதுமன்னிப்பு பொருந்தாது" என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட இரண்டு இலங்கை இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அல்ஜசீரா செய்தி சேவை வெளிப்படுத்திய போதிலும், தூதரகங்கள் ஊடாக நாட்டுக்கு அறிவிக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம், உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய, ஒரு கப்டன் உட்பட இலங்கையின் மூன்று முன்னாள் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.