சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட உறுப்பினர்கள் தொடர்பில் நாளை தீர்மானிக்கப்பட உள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி (Sri Lanka Podujana Peramuna) அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில் அண்மையில் சில பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் இணைந்து கொண்டனர்.
இவ்வாறு இணைந்து கொண்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நாளைய தினம் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சி தெரிவித்துள்ளது.
யாப்பு விதிகள்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, வசந்த யாபா பண்டார, டொக்டர் உபுல் கலப்பத்தி மற்றும் கே.பீ.எஸ் குமாரசிறி ஆகியோர் இவ்வாறு சஜித் தரப்புடன் அண்மையில் இணைந்து கொண்டனர்.
நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் இருந்து செயற்படுவதற்கு பதிலாக வேறும் அரசியல் கூட்டணி ஒன்றில் இணைந்து கொள்வது கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணானது என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் அடிப்படையில் நாளைய தினம் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசியல் சபை கூடி தீர்மானம் எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.