சித்தரத்தை எனும் அற்புத மூலிகை குறித்து இன்றுள்ள தலைமுறை பெரும்பாலும் தெரிந்திருக்காமல் இருப்பது வருத்தமான விஷயம்தான். ஆனால், இங்கே நம் உமையாள் பாட்டி அரத்தைப் பற்றி சொல்ல வந்துவிட்டாள்! நெஞ்சிலிருக்கும் சளியை வஞ்சமில்லாமல் அகற்றக்கூடிய அரத்தைப் பற்றி பாட்டியின் வார்த்தைகளில் இந்தப் பதிவில் படித்தறியலாம்!
“இந்த தும்மல், இருமல், விக்கல், கொட்டாவி… இதெல்லாம் வந்தா தடுக்க முடியாது. ஏன் வருதுன்னு கேள்வி கேக்கவும் முடியாது.” டிவியில ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் அந்த சினிமா டயலாக் எனக்கு சற்று ஆறுதல் அளித்தாலும், கடந்த இரண்டு நாட்களாக இருமலுடன் சளி இருப்பது எனக்குள் கொஞ்சம் பீதியை கிளப்பியது.
நெஞ்சு சளி, கோழை, ஈளை, இருமல், நாட்பட்ட கபம்னு எல்லாத்தையும் குணமாக்குற சக்திவாய்ந்தது இந்த அரத்தை.
மூக்கு இருக்கும்வரை சளி இருக்கும் என ராசம்மா பெரியம்மா அடிக்கடி சொல்லிக்கொண்டே மூக்கை சீந்திக்கொள்வாள். ஆனால், இப்போதிருக்கும் சூழலில் சளி, இருமல், தும்மலெல்லாம் சாதாரண விஷயமாக இல்லை. எனவே நான் இதற்கு ஏதாவது மருத்துவத்தை உடனே செய்துவிட வேண்டுமென்று முடிவெடுத்தேன்.
இதுபோன்ற குழப்பம் எனை ஆட்கொள்ளும்போதெல்லாம், எனை ஆட்கொள்ளும் ஆபத்பாந்தவர், நம் ஒன் அண்ட் ஒன்லி உமையாள் பாட்டிதான்.
அடுத்த தெருவிலிருக்கும் உமையாள் பாட்டியை இந்த லாக்டவுனில் பார்ப்பதற்கு, நான் பலத்த காவல்களையெல்லாம் கடக்க வேண்டியிருந்தது.