இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்

Dsa
0

 


கலாநிதி. றவூப் ஸெய்ன்


நேற்று ஈரான் இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல்களை நடாத்தியுள்ளது. இது பலஸ்தீனர்களிடையே உற்சாகத்தையும் பிராந்தியத்தில் பதற்றத்தையும் உருவாக்குவதாக அவதானிகள் கருதுகின்றனர். மத்திய கிழக்கில் இஸ்ரேல் என்ற  புற்றுநோய் மேலைய காலனித்துவ சக்திகளால் உருவாக்கப்பட்டு சரியாக 75 ஆண்டுகள் கடந்த நிலையில் முதன் முறையாக ஈரான் இந்த தாக்குதலை நடாத்தி உள்ளமை மிக முக்கிய திருப்பமாகப்பார்க்கப்படுகிறது.. ஈரானின் டமாஸ்கஸ் தூதுவராலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 13 பேர் பலியானமைக்கு பதிலளிப்பதாகவே இந்தத்தாக்குதல் இடம்பெற்றுள்ளபோதும் இது மிகக் கிட்டிய எதிர்காலத்தில் பிராந்தியத்தில் ஏற்படுத்தப்போகும் அதிர்வுகள் பக்க விளைவுகள் பாரியதாக இருக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது.




அறபு நாடுகளால் எல்லாப்பக்கங்களாலும் கைவிடப்பட்டு அபலைகளாகவும் அனாதைகளாகவும் அனாதரவாக விழிம்பு நிலைப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் இந்த தாக்குதலைக்கொண்டாடுவதற்கு நியாயம் உள்ளது. அதேவேளை காஸா மீதான இஸ்ரேலின் காட்டு மிராண்டித்தனமான கொலைவெறியாட்டத்தின் திசையை திருப்புவதில் ஈரானியத்தாக்குதலுக்கு ஒரு தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒப்பீட்டு ரீதியில் இஸ்ரேலை விட ஈரான் ஆயுதப்பலம் கொண்ட நாடு என்பதில் சந்தேகமில்லை ஆனால் ஈரானை ஒரு செயற்கையான போருக்குள் காலனித்துவ சக்திகள் இழுக்கின்றனவா ? என்ற கேள்வியும் இங்கே தவிர்க்கவியலாதது. கொண்டலீஸா ரைஸ் வெளியுறவுச்செயலாளராக இருந்த காலத்தில் புதிய மத்திய கிழக்கு New Middle East என்ற ஒரு அரசியல் பணித்திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.


அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் முழுமையாக கட்டுப்பட்ட மத்திய கிழக்கு என்பதே அந்தப்பணித்திட்டத்தின் பிரதான இலக்கு. ஏலவே அனைத்து அறபு நாடுகளும் போல் அமெரிக்க கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு அமெரிக்க இராணுவத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு சற்று மாற்றமான கொள்கை கொண்ட சத்தாமின் ஈராக்கும் இராணுவ ரீதியில் ஆக்கிரமிக்கப்பட்டு அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளது. எஞ்சியிருப்பது ஈரான் மட்டுமே. லெபனான் சிரியா என்பன ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளபோதும் அவை மிகப்பெரிய ஆயுதப் பலம் கொண்ட நாடுகள் அல்ல. ஹிஸ்புல்லாஹ் நேரடியாக ஈரானின் ஆதரவில் செயற்படும் ஆயுத இயக்கமே. ஈரான் மீதான இராணுவ தாக்குதல் மேலைய நாடுகளின் இறுதி மூலோபாயமாக இருக்கலாம். ஆனால் அதற்கு பிராந்தியம் கொடுக்கும் விலை பாரியதாக மாறலாம்.


இனி இங்கு என்ன நடக்கலாம் என்ற ஊகங்கள் பல. இஸ்ரேல் மறுதாக்குதல் நடாத்தினால் பிராந்தியத்தில் ஒரு முழு அளவுப் போர் Full fledged war வெடிக்கலாம். அமெரிக்கா பிரான்ஸ் ஜேர்மன் ஐக்கிய ராச்சியம் போன்ற இஸ்ரேல் ஆதரவு அல்லது பாலூட்டி நாடுகள் அனாவசியமாக மூக்கை நுழைத்தால் போர் முழுவீச்சுப்பெறலாம். இஸ்ரேலிடம் அணுகுண்டுகள் உள்ளன என்பது ஊர்ஜிதம். ஆனால் ஈரானில் உள்ளதா என்பது ஊகமாகவே உள்ளது. ஐஸன் ஹூவரின் கால ரிஸா பஹ்லவிக்கு வழங்கப்பட்ட யுரேனியம் தொடர்ந்தும் செறிவாக்கப்பட்டு வந்திருந்தால் ஈரானிடமும் அது இருக்க வேண்டும்.அந்தக்ககட்டத்தை ஈரான் கடந்திருக்க வேண்டும்.ஆக உச்ச கட்டத்தில் இத்தகைய ஆயுதங்களைக் கூட பயன்படுத்தும் நிலை கூட தோன்றலாம்.


நெடன்யாஹூ ஊழல் குற்றச்சாட்டின் பின்னணியிலான சிறைத்தண்டனையை தவிர்ப்பதற்கு அதிகாரத்தைத்தக்க வைக்கவே போரில் களமிறங்கியுள்ளமை தெளிவு எனவே அடுத்தடுத்த கட்டம் போரை அவர் முன்னகர்த்தும் வாய்ப்புள்ளது. இது இஸ்ரேலின் முழு எதிர்காலத்தையும் சூன்யத்தில் மூழ்கடிக்கும் வாய்ப்பும் உள்ளது. அமெரிக்கா தனது ராணுவ மானியத்தெகையை நிறுத்தும் பட்சத்தில் இந்நிலை உருவாகலாம். மற்றொன்று ஈரானில் பொருளாதார நெருக்கடியுள்ள நிலையில் அது போருக்கு முன்னுரிமை அளிக்குமா என்பது.

எல்லாவற்றுக்கும் அப்பால் இது ஒருசில  பதில் தாக்குதல்களோடு நிறுத்தப்படும் சூழலும் உண்டு.


எது எப்படியோ ஈரான் முழுப்போரில் இறங்கினால் பிராந்தியப்பதற்றம் நிச்சயம் அதிகரிக்கும். அது உலகப்பொருளாதாரத்தை மீண்டும் உலுக்கி எடுக்கும். பலஸ்தீனர்களுக்கு தற்காலிக ஆறுதலை அளிக்கும். போர் பதற்றத்தை உருவாக்குகின்றது. பதற்றம் போரை உருவாக்குகின்றது!!என்ற வோல்டர் லிப்மனின் கூற்று சரியானதாகவே தோன்றுகிறது.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top