ஸெய்ன்ஸித்தீக்
இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நோன்பு பெருநாள் தொழுகை இறக்காமம் குளக்கரை மைதானத்தில் இடம்பெற்றது. தொழுகையினை மௌலவி ஏ.கே. அப்துல் றவூப் நடத்தி வைத்தார். ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டார்கள்.
இஸ்லாமிய மாதமான ரமலான் முழுவதும் நோன்பு நோற்று, அடுத்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளன்று கொண்டாடப்படும் பெருநாளே "ஈதுல்ஃபித்ர்' எனும் ஈகைத் திருநாளாகும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்த வேளையில், அங்குள்ள மக்கள், இரண்டு நாட்களில் விளையாட்டு, வேடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அம்மக்களிடம், "இந்த இரண்டு நாட்களின் சிறப்பென்ன?' என்று வினவ, அதற்கு அவர்கள் ""அறியாமைக் காலத்தில் நாங்கள் இந்த இரண்டு நாட்களிலும் விளையாடக் கூடியவர்களாக இருந்தோம்'' என்றனர். ""அந்த இரு நாட்களை விடச் சிறந்த இரண்டு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு தந்துள்ளான். அவைதான் ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள் ஆகும்'' என்றார் நபிகள்.
இஸ்லாமிய மாதங்களில் கடைசி மாதமான துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் கொண்டாடப்படும் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாளாகும்.
ரமலான் முழுவதும் நோன்பு நோற்க வைத்து நம்முடைய பாவக்கறைகளைப் போக்கி, நமக்குப் புதுவாழ்வு தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவனைப் புகழும் முகமாக நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
அல்லாஹ் தன் திருமறையின் 2ஆம் அத்தியாயம் 185ஆம் வசனத்தில், "நோன்பு கடமையானது' எனச் சொல்லிவிட்டு, அந்த வசனத்தின் இறுதியில், "உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவே அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்' எனக் குறிப்பிட்டுக் கூறுவதால் இந்நாள் இறைவனை நினைவு கூர்ந்து, புகழக்கூடிய இனிய நாள் என உணர்கிறோம்.
"பெருநாள் அன்று முதல் கடமையாகத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்' என்றார் நபி(ஸல்) அவர்கள். இதனடிப்படையில், "பெருநாள் தொழுகையை சூரியன் உதயமான சிறிது நேரத்தில் தொழுவதுதான் சிறப்பான செயலாகும்' என இப்னு உமர்(ரலி) அவர்கள் "புகாரி' என்னும் நபி வழித் தொகுப்பில் அறிவித்துள்ளார்.
கடமையான ஐவேளைத் தொழுகையைக் கூட்டாக பள்ளிவாசல் சென்று நிறைவேற்றச் சொன்ன நபி(ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மைதானம் அல்லது திடலில் நிறைவேற்றுபவராக இருந்தார். எனவே பெருநாள் தொழுகையை மைதானம் அல்லது திடலில் நிறைவேற்றுவது நபி வழியாகும்.
பெருநாள் தொழுகை நடைபெறும் ஈத்தா மைதானத்திற்கு ஒரு வழியாகச் சென்று, மறுவழியாக வீடு திரும்புவதும் நபி வழிதான்.
"நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் பள்ளியில் தொழாமல், திடலுக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுபவராக இருந்தார்' என்பது அபூசயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி. "நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு செல்லும்போது ஒரு வழியில் சென்று, திரும்பும்போது மற்றொரு வழியில் திரும்புவார்கள்' என்பது ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி. இவையும் புகாரி என்னும் நபி வழித் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
ஐவேளைத் தொழுகைக்கு அழைக்கும் "அதான்' என்னும் அழைப்புப் பெருநாள் தொழுகைக்கு இல்லை.
பெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுவதற்கும் நபி (ஸல்) அனுமதி அளித்திருந்தார்கள். ஆனால் பெண்கள் பெருநாள் தொழுகை நடைபெறும் திடலுக்கு வருவதை மிகவும் வலியுறுத்தினார்கள். "மேலங்கி (பர்தா) இல்லாத பெண்கள்' தங்கள் தோழிகள் அல்லது சகோதரிகளிடம் இரவல் வாங்கியாவது பெருநாள் திடலுக்கு வர வேண்டும்' என அவர்கள் கூறியதிலிருந்து இதை நாம் உணரலாம். தொழுவதற்குத் தடையுள்ள மாதவிடாய்ப் பெண்கள்கூட திடலுக்கு வந்து ஓரமாக இருந்து சொற்பொழிவைக் கேட்க வேண்டும். பிரார்த்தனைகளில் பங்கேற்க வேண்டும். நம்மோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என விரும்பினார் நபி (ஸல்) அவர்கள். பெருநாள் தொழுகை முடிந்ததும் பெண்களிடம் தர்மம் செய்யுமாறு கூறியபோது, அவர்கள் தங்கள் கழுத்தில் கிடந்த மாலைகளையும், வளையல்களையும் தர்மமாகக் கொடுத்தனர்.
""நற்பணிகள் மற்றும் பிரார்த்தனைகளில் பெண்களும் பங்கு பெற வேண்டும் என்பதற்காக, பருவமடைந்த -மற்றும் மாதவிலக்கான பெண்களையும் பெருநாள் தொழுகைக்காக வெளியே அனுப்புமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். ஆனால் மாதவிலக்கான பெண்கள் தொழும் இடத்தில் ஓரப்பகுதியில் இருக்க வேண்டும்'' என உம்மு அதிய்யா(ரலி) அவர்கள் புகாரி, முஸ்லிம் போன்ற நபிவழித் தொகுப்புகளில் அறிவிக்கிறார்கள்.
""பெருநாள், அருள் வளமும் புனிதமும் நிறைந்தது'' என நபி(ஸல்) குறிப்பிடுவதால் அன்று இறைவனைத் தொழுது அருள்வளத்தை வேண்டியும், தன் நலன், உறவினர் நலன், நாட்டு நலன் நாடியும் இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்.
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், அதைத் தொடர்ந்து வரும் மூன்று நாட்கள் ஆகியன நோன்பு நோற்கத் தடை செய்யப்பட்ட நாட்களாகும்.
வெள்ளிக்கிழமைகளில் தொழப்படும் ஜூம்ஆ தொழுகையில் முதலில் சொற்பொழிவாற்றுவார்கள். பின்னர் தொழுகை நடைபெறும். பெருநாள் தொழுகையில் அதற்கு மாற்றாக முதலில் தொழுதுவிட்டு, பின்னர் சொற்பொழிவு நடைபெறும்.
நோன்புப் பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன் உணவருந்திவிட்டு செல்லும் பழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள்.
பெருநாளை ஏழை, பணக்காரர் எனப் பாகுபாடின்றி அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காகவும், நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதற்குப் பரிகாரமாக, ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும், ""ஸதகத்துல்ஃபித்ர்'' என்னும் நோன்புப் பெருநாள் தர்மத்தை சிறுவர், சிறுமியர், கைக்குழந்தைகள், பெரியோர், ஆண்கள், பெண்கள், அடிமைகள் என அனைவர் மீதும் கடமையாக்கினார் நபி (ஸல்) அவர்கள். சிறுவர்கள், அடிமைகள், பெண்கள் ஆகியோர் யாரைச் சார்ந்திருக்கின்றார்களோ அவர்கள், இவர்களுக்குப் பதிலாக தர்மம் வழங்க வேண்டும். தனது பெருநாள் தேவைக்குப் போக அதிகமாக யாரிடம் உள்ளதோ அவர்கள் இந்தத் தர்மத்தைக் கொடுக்க வேண்டும். அக்காலத்தில் கோதுமை, பேரித்தம்பழம், உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி ஆகியனவற்றை உணவாக உட்கொண்டதால் அவற்றை கொடுக்கக் கட்டளையிட்டார்கள். இக்காலத்தில் உணவாக அரிசி இருப்பதால் அரிசியையும், சமையலுக்குத் தேவையான பொருட்களையும் கொடுக்கலாம். தர்மப் பொருட்களை கூட்டாக வசூலித்து விநியோகித்தால், ஏழைகளை அறிந்து, தேவைப்படுவோருக்கு வீடு தேடி சென்று வழங்கலாம்.
நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஏதேனும் உணவுப் பொருளாக ஒரு ஸôவு, அல்லது தோல் நீக்கப்படாத கோதுமையிலிருந்து ஒரு ஸôவு, அல்லது பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு ஸôவு, அல்லது உலர்ந்த திராட்சையிலிருந்து ஒரு ஸôவு வழங்கி வந்தோம்'' என அபூ ஸயிதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் ஒரு ஸôவு உணவுப் பொருள் வழங்க வேண்டும்.
ஒரு ஸôவு என்பது நடுத்தரமான இரு கைகளை இணைத்து வைக்கும்போது எவ்வளவு கொள்ளுமோ, அந்த அளவில் நான்கு முறை மடங்காகும். இது ஒருவர் கொடுக்க வேண்டிய தர்மத்தின் அளவாகும்.
பெருநாள் கொண்டாடப்படும் நாளின் முந்தைய தினத்தில் சூரியன் மறைந்தவுடன் நோன்புப் பெருநாள் தர்மம், கடமையாகிவிடுகிறது. பெருநாளுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பே கொடுக்கலாம். நபித் தோழர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாளைக்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்னதாகவே கொடுத்துவிடுவார்கள். இந்தத் தர்மத்தை பெருநாள் தொழுகைக்குப் பின் கொடுத்தால் அது ஏனைய தர்மம் போன்று ஆகுமே தவிர நோன்புப் பெருநாள் தர்மம் ஆகாது. நோன்பாளி எந்த ஊரில் இருக்கிறாரோ அந்த ஊரிலுள்ள ஏழைகளுக்கே கொடுக்க வேண்டும். அவ்வூரில் தேவைப்படுவோரும் ஏழைகளும் இல்லாவிட்டால், மற்ற ஊரிலுள்ளவர்களுக்குக் கொடுக்கலாம்.
பெருநாளன்று இறைவனை அதிகமாகத் துதித்து, அவனுடைய அருள் வளங்களை வேண்டி நிற்கும் அதே வேளையில், மார்க்கத்திற்கு முரண்படாத பாடல்கள், விளையாட்டுகளில் ஈடுபடத் தடை ஏற்படுத்தவில்லை.
பெருநாளன்று மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள் என்பதைப் பற்றி அவர்களின் மனைவி அன்னை ஆயிஷால் (ரலி) அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்.
""என் அருகே இரு சிறுமியர் "தஃப்' எனும் கருவி அடித்து பாடிக் கொண்டிருந்தனர். அப்போது என் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்விருவரையும் விரட்டினார்கள். அப்போது நபி (ஸல்), "அபூபக்ரே! அவ்விருவரையும் விட்டு விடுவீராக! ஏனெனில் இன்று பெருநாளாகும்' என்றனர்.
வேடிக்கை, வீணானவைகளை விட்டும் விலகி, உண்மையான மகிழ்ச்சியுடன் பெருநாளைக் கொண்டாடி இறையருள் பெறுவோமாக!