அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்தவிருப்பதாக சமூல வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.
கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களை மையமாகக் கொண்டு 10,000 நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சமுர்த்தி திட்டத்தை விடவும் மூன்று மடங்கு தொகை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “அவஸ்வெசும வேலைத்திட்டத்திற்கு” சமுர்த்தி திட்டத்தை விடவும் மூன்று மடங்கு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சமூர்த்திக்காக 60 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அஸ்வெசும திட்டத்திற்காக 180 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பொருளாதார நெருக்கடியினால் பெருமளவில் கஷ்டங்களை எதிர்கொண்ட மக்களுக்கான நிவாரணமாகவே அதனை வழங்குகிறோம்.
மேலும், அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்த எதிர்பார்க்கப்படுவதோடு, 2000 ஹெக்டயாரில் தேயிலை நடுகைச் செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டார்.