இலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் கடந்த ஜனவரி மாதம் 342 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய வங்கியின் வெளித்துறை செயற்பாடுகள் பற்றிய சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின் படி, ஜனவரி 2020க்கு பிறகு நாடு கண்ட அதிகபட்ச மாதாந்திர மதிப்பு இதுவாகும்.
இதேவேளை 2023 டிசம்பரில் 269 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2023 ஜனவரியில் 154 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஜனவரியில் இலங்கையின் சுற்றுலா வருவாய் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் நாடு 208,253 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளதுடன் இது 2023 இல் 102,545 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்திருந்தது.
இதற்கிடையில், 2024 ஜனவரியில் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தைப் பொறுத்தமட்டில், முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
ஜனவரி 2023 இல் 437 மில்லியன் டொலர்கள் மற்றும் 2023 டிசம்பரில் 570 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில், ஜனவரி 2024 இல் தொழிலாளர்களின் பணம் 488 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2022 இல் குறிப்பிடத்தக்க மீட்சியை பதிவு செய்ததில் இருந்து, இடையிடையே பருவகால ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் பரந்த அடிப்படையிலான அதிகரித்து வரும் போக்கை தொடர்ந்து பதிவு செய்ததாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.