ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்க்கையில் ரமழானை எதிர்கொள்வதென்பது ஒரு சந்தோசமான எதிர்பார்ப்பாகும். இன்னும் ஒரு சில நாட்களில் அந்த மான்பு மிக்க மாதம் நம்மை வந்தடைய இருக்கிறது.
'ரமழான் மாதம் என்பது அல் குர்ஆன் அருளப்பட்ட மாதமாகும். அது மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிக்கக்கூடிய தெளிவான சான்றுகளுடன் அருளப்பட்டதாகும். யார் ரமழானை அடைகின்றாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்றுக் கொள்ளவும், யார் நோயாளியாகவோ, பிரயாணியாகவோ இருக்கின்றாரோ அவர் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளவும். அல்லாஹ் உங்கள் மீது இலகுவையே நாடுகின்றான், அவன் உங்கள் மீது கடினத்தை நாடவில்லை'. (2:185)
இவ்வாறு விதியாக்கப்பட்ட இந்த நோன்பு நம்மீது அல்லாஹ் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. ரழமான் குறித்தும், அதன் நற் பலன்கள் குறித்தும், நன்மைகள், பிரதிபலன்கள் குறித்தும் நாம் அற்pந்து வைத்துள்ளோம். இன்னும் இன்னும் அறிவதற்காகக் காத்திருக்கின்றோம். ஆனால் நோன்பின் நன்மைகள் பற்றிப் பேசுகின்றபோது அதன் நோக்கம், தேவை, பயன்பாடுகள் பற்றியும் சிலாகிக்க வேண்டியுள்ளது.
'விசுவாசிகளே! உங்களுக்கு முன்பிருந்தவர்களுக்கு நோன்பு விதியாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. நீங்கள் (முத்தகீன்களாக) பயபக்தியுள்ளவர்களாக ஆகுவதற்காக. (2:183)
ஆகவே, நோன்பின் பிரதான நோக்கம் தமது உள்ளங்களை பரிசுத்தப்படுத்துவதும், நம்மை பயபக்தியாளர்களாக ஆக்குவதுமே.
அல்லாஹ் நம்மீது கொண்ட அருளினால் நம்மைப் பரிசுத்தப்படுத்துவதற்காக வந்த நோன்பு, அதன் பிரதான நோக்கத்தோடு சேர்ந்தாற்போல இன்னும் பற்பல நன்மைகளையும், அனுகூலங்களையும் நமக்கு அள்ளித் தருகின்றது. நவீன விஞ்ஞானமும், வைத்தியத் துறையும், இன்றைய நவீன கால ஆய்வுகளும், நோன்பு தருகின்ற நன்மைகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றன. நாளுக்கு நாள் அந்தப் பட்டியல் நீண்டு கொண்டுதான் இருக்கின்றது.
நோன்பு நமக்குத் தருகின்ற மிக முக்கியமான தேகாரோக்கிய மற்றும் மருத்துவ நன்மைகளை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஒரு மனிதன் நோன்பு நோற்கின்றபோது அவனது உள்ளம் பரிசுத்தமடைவது மாத்திரமின்றி அவன் உடலும் தேகாரோக்கியம் பெறுகின்ற ஒரு வணக்கமாக நோன்பு அமைகின்றது.
நவீன விஞ்ஞானம் பல்வேறுபட்ட உண்ணா நோன்பு முறைகளை ஆராய்ந்து பார்த்துள்ளது.
இந்த உலகில் பல்வேறுபட்ட மக்கள், இனக் குழுமங்கள், மதங்கள் இந்த நோன்பு நோற்றலைக் கடைப்பிடிக்கின்றது. சிலர் திண்ம உணவுகளை மட்டும் தவிர்ந்து நோன்பு நோற்கின்றனர். இன்னும் சிலர் குறிப்பிட்ட சில உணவுகளை மட்டும் தவிர்ந்து நோன்பு நோற்கின்றனர். சில சமயங்களில் தொடர் உண்ணா நோன்புகளை நாட்கணக்கில் அனுஷ;டிக்கின்றனர். இப்படிப்பட்ட பல்வேறுபட்ட நோன்பு வகைகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் மற்றும் அறிவியலாளர்கள் கண்டு பிடித்த ஒன்று தான் மனித உடம்புக்கு எவ்விதக் கேடும் விளைவிக்காமல், அதிக மருத்துவ ரீதியான நன்மைகளை வழங்கக் கூடியது நாம் நோற்கின்ற நோன்பு முறையே. (Intermittent Fasting) அதாவது சில மணித்தியாளங்கள் எதுவும் உண்ணாமல் பட்டிணி இருந்துவிட்டு இன்னும் சில மணித்தியாளங்களில் சாதாரணமாக உண்பதும், குடிப்பதும் மிகப் பெரும் தேகாரோக்கிய மருத்துவ நன்மைகளைப் பெற்றுத் தரவல்லது.
1. முதலாவது நன்மை: நோன்பு எமது உடற்கலங்களின் ஹோமோன்களின் தொழிற்பாட்டை, மரபணுக்களின் (Gene) செயற்பாட்டை ஒழுங்குபடுத்துகின்றது.
இதன் மூலம் செயலிழந்து போன நமது கலங்கள் புத்துயிர் பெறுகின்றன. பாதிப்படைந்த மரபணுக்கள் மீண்டும் தமது பழைய நிலைக்கு தம்மைச் சீர்படுத்துகின்றன. இவ்வாறானதொரு தொழிற்பாட்டை எவ்வித மருந்து, மாத்திரைகளாலோ செய்யமுடியாது என்பது தான் இதிலுள்ள இன்னுமொரு விஷேட அம்சமாகும்.
இவ்வாறான நுண்ணிய பொறிமுறைச் செயற்பாடுகள் மனிதனுக்கு ஏற்படுகின்ற பல்வேறு நோய்களை விட்டும் மனிதனைப் பாதுகாப்பதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் வலுவூட்டுகின்றது.
2. உடல் பருமனைக் குறைக்கின்றது. தேவையற்ற கொழுப்பை அகற்றுகின்றது.
இன்று நம்மில் அதிகமானோர் முகங்கொடுக்கும் மிகப் பெரும் பிரச்சினை உடற் பருமன் மற்றும் கொழுப்பு (Cholesterol) இவற்றுகக்கு மிகச் சிறந்த நிவாரணம் நோன்புதான். அதனால், இந்த நன்மைகளை அடைவதற்கு நாம் எமது ஸஹர் உணவை அளவோடும், இப்தார் உணவை சிறு கவளங்களோடும்
மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எமது நோன்பினால் நாம் பெற் வேண்டிய இப்பயன்களை இழக்க நேரிடும். இவ்விடயத்தில் எமது சமூகத்தினர் மிகப் பெரும் தவறைச் செய்கின்றனர். நமது ஸஹர் மித மிஞ்சியதாகவும், நமது இப்தார் அதி ஆடம்பரமாகவும் இருப்பது தான் இன்னும் நம்மை நோயாளியாகவே வைத்திருக்கிறது எனலாம்.
3. இன்சுலின் தொழிற்பாட்டை மேம்படுத்துகின்றது. பரம்பரையல்லாத நீரிழிவு (சீனி) வியாதி ஏற்படுகின்ற வாய்ப்புக்களைக் குறைக்கின்றது.
நமது சமூகத்தில் தற்போதுள்ள மிகப் பெரும் பிரச்சினை இந்த நீரிழிவு (Diabetic) வியாதி என்றால் அது மிகையாகாது. நமது நாட்டில் மூன்றில் ஒருவர் என்ற வீதத்தில் மக்கள் இப்பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதை விட்டும் நமது நோன்பு நம்மைக் காக்கின்றது. பரம்பரையாக அன்றி ஏற்படுகின்ற (Diabetic Mellitus Type –2) வை நோன்பின் மூலம் வெகுவாகக் குறைத்துக்கொள்ள முடியும். அதே போன்று இன்சுலின் தொழிற்பாட்டு செயற்திறனையும் ஊக்குவிக்க முடியும். அவ்வாறே நீரிழிவு வியாதி நோயாளிகளின் சீனி மட்டத்தைப் பேணவும், சிறு நீரக செயலிழப்பு வீதத்தைக் கட்டுப்படுத்தவும் நோன்பு பயனளிக்கின்றது.
4. புற்றுநோய் மற்றும் கொடிய தீரா வியாதிகளை விட்டும் பாதுகாக்கின்றது.
நோன்பின் மூலம் மனித உயர்கலங்கள் தமது நொதிய தொழிற்பாடுகள் மற்றும் பக்கழிவுகளினால் ஏற்படுகின்ற தாக்கங்களைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுகின்றன. இதன் மூலம் கொடிய, நீண்ட கால நோய்கள் ஏற்படுவதையும், புற்று நோய் போன்ற தீர்க்க முடியாத நோய்கள் ஏற்படுவதையும் குறைத்துக்கொள்ள முடிகின்றது.
5. இருதய தொழிற்பாட்டைச் சீர்படுத்துகின்றது.
நோன்பின் மூலம் மாரடைப்பு (u;eart Attack) ஏற்படுவதையும், இருதய செயலிழப்பு (u;eart Failure) போன்ற திடீர் மரணங்களைக் கொண்டுவரும் நோய்க் காரணிகளை இல்லாமல் செய்வதில் நோன்பு மிகப் பெரும் பங்காற்றுகின்றது. இதனைத் தவிர உயர் குருதியமுக்கம் (u;igh Blood Pressure) கொழுப்புப் படிதல் (Atherosclerosis) போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதில் உண்ணா நோன்பின் பங்கு குறித்து ஆய்வுகள் சாதகமான முடிவுகளையே சுட்டி நிற்கின்றன.
6. மூளை விருத்தி மற்றும் சிந்தனைத் திறன் தொழிற்பாட்டு விடயத்தில் நோன்பின் பங்கு அளப்பெரியது.
மனித மூளையின் சிந்தனைத் திறனை, நுண்ணறிவு வீதத்தை அதிகரிக்கும் காரணிகளை நோன்பு தன்னகத்தே கொண்டுள்ளதாக பல்வேறு நரம்பியல் நிபுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நோன்பின் மூலம் ஞாபக மறதியிலிருந்தும் தம்மை விடுவித்துக்கொள்ள முடியும் என அண்மைய ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
இவற்றுக்கப்பால் நோன்பு ஒரு மனிதனை நீண்ட கால ஆயுளை தேகாரோக்கியம் கொண்டதாக மாற்றுவதோடு மட்டுமின்றி அவனது ஆயுள் காலத்தையும் நீடிக்கச் செய்வதாக நவீன விஞ்ஞானம் சான்று பகர்கின்றது.
ஆக மொத்தத்தில் இறைவன் நம்மீது கொண்ட அன்பினால் நமக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த நோன்பு நமது உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துவது போன்றே நமது உடலையும் பரிசுத்தப்படுத்தி தேகாரோக்கியம் மிக்க ஓர் பூரண மனிதனாக நம்மை மாற்றுகின்றது என்றால் அந்த இறைவனின் கருணைக்கு நன்றியுள்ளவர்களாக நாம் மாறவேண்டியுள்ளது. எனவே பகல் முழுக்க நோன்பு நோற்கும் நாம் இரவில் அதிகம் அவனுக்காக நின்று வணங்குவதன் மூலமே அவனுக்கு நன்றியாக நாம் செய்யும் சிறந்த நல்லமலாகும்.
இத்தனை நோன்பின் பயன்களையும், பிரயோசனங்களையும் பெற வேண்டுமென்றால், எமது ஸஹர் நேர உணவைக் குறைத்து, சொற்ப அளவாக மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும், பகல் நேரத்தில் நித்திரை கொள்வதைத் தவிர்த்து சுறுசுறுப்புடன் வேலைகளில் ஈடுபடும் விதமாகத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்னும் நமது இப்தார் உணவுகள் எளிமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அதிக எண்ணெய் வகைகளுடன் கூடிய உணவுகளையும், அதிக குளிர்பானங்களையும் முற்றிலும் தவிர்த்தல் சாலச்சிறந்தது.
ஆகவே இரவு காலங்களை வீணாகக் கழித்துவிடாது இறைவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு நின்று வணங்கங்கூடிய ரமழானாக எமது ரமழானை ஆக்கிக் கொள்வோம்.
நமது ரமழான் நம்மை மாற்றி இந்த அனைத்து நன்மைகளையும் முழுமையாகப் பெற்றுக் கொள்ளும் ஒரு சிறந்த நோன்பைப் பெற நாம் முயற்சி செய்வோமாக.