S.M.Z.சித்தீக்
இறக்காமம் பிரதேசத்தில் தெரு நாய்த் தொல்லைகள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளன. அத்தோடு தற்போது நாட்டில் நிலவிவரும் சூடான காலநிலை காரணமாக விசர் நாய்கள் அதிகரிப்பதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன. காலை 6 மணியிலிருந்து நாய்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளிலும் சிறு தெருக்களிலும் உலாவி வருகின்றன.
தற்பொழுது நோன்பு காலமாக இருப்பதினால் குர்ஆன் மதரஸாக்கள், மாணவர்களின் பகுதிநேர வகுப்புகள் என்பன காலை வேளையிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்தெரு நாய்கள் வீதிகள் நின்று குரைத்த வண்ணம் நாய்களுக்கே உரித்தான சித்து விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருவதால் மாணவர்களினதும் பொதுமக்களினதும் இயல்பு நடமாட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இறக்காமம் பிரதேச சபை, மற்றும் மிருக வைத்தியசாலை என்பன இணைந்து இவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது இப் பிரதேச வாசிகளின் பேரவாவாகும்.