Dr.இஸ்ஸத் முஹம்மட் - MBBS, MRCP (UK)
நீரிழிவு (Diabetes mellitus) இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் தவிர்க்க முடியாத ஒரு சொல்லாக மாறி இருக்கிறது.
நீரிழிவு என்றால் என்ன?
இதனைக் கட்டுப்படுத்த உட்கொள்ளும் மருந்துகளால் கிடைக்கும் பயன்கள் என்ன?
இதற்கு- உரிய முறையில் சிகிச்சை பெறாவிட்டால் உண்டாகும் பாதிப்புகள் என்ன?
என்பன பற்றிய தெளிவு மக்களிடம் போதிய அளவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
மிக எளிய உதாரணங்களூடாக இவற்றை ஓரளவுக்குத் தெளிவுபடுத்த முனைகிறேன்.
எமது உடம்பை ஒரு கட்டிடமாக நினைத்துக் கொள்வோம்.
ஒரு கட்டிடத்தை உருவாக்க எப்படிப் பல்லாயிரக்கணக்கான செங்கற்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ அதுபோல ஒரு உடம்பைப் பிரித்துப் பார்த்தால் அதில் கோடிக்கணக்கான கலங்கள் காணப்படும்.
எமது எந்த ஒரு அங்கத்தையோ அல்லது உறுப்பையோ எடுத்துக் கொண்டால் அதன் அடிப்படையான அலகு 'கலம்' ஆகும்.
இந்த ஒவ்வொரு கலமும் உயிர் வாழ்வதற்குச் 'சக்தி' அவசியமாகும்.
ஒரு கலத்தை நாம் உருப்பெருக்கி அவதானித்தால் அதற்குள் இடம்பெறுகின்ற நிகழ்வுகள் ஒரு பெரும் தொழிற்சாலையில் நடந்து கொண்டிருக்கும் பல்வேறு செயல்பாடுகளுக்கு ஒப்பாயிருக்கும்.
கலத்தினுள் நடைபெறும் மிக முக்கிய செயற்பாடாக சக்திப் பிறப்பாக்கத்தைக் குறிப்பிடலாம்.
இங்கு பிறப்பிக்கப்படும் சக்தி சேகரிக்கப்பட்டு எமது உடல் தொழிற்பட உபயோகிக்கப்படுகிறது.
நாம் வெளிப்படையாகக் காணுகின்ற நடத்தல், ஓடுதல் போன்ற உடல் அசைவுகளாக இருக்கட்டும் -
எமது உடலினுள் நடைபெறுகின்ற - அங்கங்களின் தொழிற்பாடுகளாக இருக்கட்டும் ,
பார்வை, கேள்வி, சிந்தனை போன்ற புலன் சார்ந்த இயக்கங்களாக இருக்கட்டும்-
இவை எல்லாவற்றுக்கும் 'சக்தி' மிக அவசியமாகும்.
நாம் வீட்டிலே ஒரு விறகடுப்பைப் பயன்படுத்தும் போது , அங்கே விறகு எரிபொருளாகவும், அதை எரிப்பதற்குத் தேவையான மற்றைய கூறாக வளியில் உள்ள ஒக்சிஜனும் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு பிறப்பிக்கப்படும் சக்தியின் வடிவங்களாக வெப்பத்தையும் ,ஒளியையும் நாம் உணரலாம்.
எமது உடற்கலங்களுள் நடைபெறும் இதற்கு ஒப்பான சக்திப் பிறப்பாக்கத்திற்கு மூலக் கூறுகளாக குளுக்கோசும், ஒக்சிஜனும் தேவைப்படும்.
நாம் உண்ணுகின்ற உணவு சமிபாட்டுக்கு உட்பட்டு சிறு சிறு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு அது குளுக்கோஸ் ஆக மாற்றப்படும்.
இந்த குளுக்கோஸ் ஆனது உணவுக் கால்வாயில் இருந்து உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் சேர்க்கப்படும்.
அதுபோல எமது சுவாசப் பையினால் உள்வாங்கப்படும் ஒக்சிஜனானது இரத்தத்தில் காணப்படுகின்ற ஹீமோகுளோபின் கூறுகளின் ஊடாக இரத்தத்தில் கடத்தப்படும்.
எமது உடலினுள் தொடர்ச்சியாக சுற்றி ஓடிக் கொண்டிருக்கின்ற இரத்தத்தின் முக்கியமான தொழிற்பாடுகளில் ஒன்றாக எமது கலங்களுக்குத் தேவையான, எரிபொருள் மூலப் பொருட்களான குளுக்கோஸையும் ஒக்ஸிஜனையும் ஒவ்வொரு கலத்துக்கும் அருகில் கொண்டு சேர்ப்பதைக் குறிப்பிடலாம்.
நீரிழிவு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கு முதல் இவ்வாறு இரத்தத்தின் மூலம் கொண்டுவரப்படுகின்ற குளுக்கோஸ் மூலக்கூறுகள் எமது கலங்களுக்குள் எவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுதல் மிக அவசியமாகும்.
இதனைப் பின்வரும் ஒரு எளிய உதாரணத்தின் ஊடாகப் புரிய வைக்க முனைகிறேன்.
ஒரு ஊருக்குள்ளே ஆயிரக்கணக்கான வீடுகள் இருக்கின்றன. அந்த ஊருக்குள் வருகின்ற பிரதான வீதி பல தெருக்களாகப் பிரிந்து அந்த ஒவ்வொரு தெருவும் இன்னும் சிறு சிறு பாதைகளாகப் பிரிந்து ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி வழி அமைத்துக் கொடுத்திருப்பதாக வைத்துக் கொள்வோம்.
இந்த வீடுகளை எமது கலங்களாகவும் இந்தப் பாதைகளை எமது இரத்த சுற்றோட்டத் தொகுதியின் கிளைகளாகவும் வைத்துக் கொள்வோம்.
இப்போது உங்கள் கற்பனையில் கலம் என்ற வீடு இருக்கிறது. அதன் வாசல் வரைக்கும் இரத்த ஓட்டம் என்ற பாதை குளுக்கோஸ் என்ற எரிபொருளைக் கொண்டு வந்திருக்கிறது.
இருந்தாலும் வீடு பூட்டிக்கிடக்கிறது. இந்த வீட்டுக்கு ஒரு விஷேடம் இருக்கிறது.
அதற்குத் தேவையான பொருட்களை வெளியிலிருந்து அனுமதிக்க அதன் சுவரிலே விஷேடமான கதவுகள் இருக்கும்.
அக்கதவுகளை அவற்றுக்கே உரித்தான திறப்புகளால் மாத்திரமே திறக்க முடியும்.
குளுக்கோசை இரத்தத்திலிருந்து கலத்தினுள் அனுப்புவதற்கு உரிய பிரத்தியேகமான கதவினுடைய திறப்பின் பெயர்தான் இன்சுலின்.
இன்சுலின் என்பது 'சதையி' என்னும் சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் ஒரு ஹோமோனாகும்.
இந்த இன்சுலின் தான் குருதியிலிருந்து குளுக்கோசை கலங்களுக்குள் செல்ல அனுமதிக்கும் திறப்பாகும்.
நீரிழிவு என்றால்- குருதியில் உள்ள குளுக்கோஸ் ஆனது கலங்களுக்குள் போதிய அளவில் செல்ல முடியாத கட்டத்தில்- குருதியில் காணப்படுகின்ற குளுக்கோஸின் அளவு அதிகரித்திருக்கும் நிலையாகும்.
இது பின்வரும் சந்தர்ப்பங்களில் நிகழலாம்.
1- சுரக்கப்படுகின்ற இன்சுலினின் அளவு குறைவாக இருக்கின்ற சந்தர்ப்பம்.(Insulin deficiency)
2- போதிய அளவு இன்சுலின் எனும் திறப்பு குருதியில் இருந்த போதும்
கதவுகளை முழுமையாகத் திறந்து கொள்ள முடியாத விதத்தில் கதவுகளில் உள்ள கோளாறு.(Insulin resistance)
ஆக, நீரிழிவு நோயாளியின் இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரித்துக் காணப்படும் அதே நேரம் அவரது உடற்கலங்களுக்குள் தேவையான அளவு குளுக்கோஸ் சென்றடைந்திருக்காது.
மறுதலையாகச் சொல்லப்போனால் கலங்களைப் பொறுத்தவரையில் அவை குளுக்கோஸ் தமக்குப் போதிய அளவில் கிடைக்கவில்லை என்ற செய்தியை மூளைக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும்.
அதன் தொடர்ச்சியாக மூளை பசியை உணர்த்தும்.
இதனால் இந்நோயாளர்கள் கூடிய அளவு பசியுடையவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் சாப்பிடுகின்ற உணவில் இருந்து வருகின்ற குளுக்கோஸ் இரத்தத்தில் இன்னும் அதிகரிப்பை ஏற்படுத்துமே தவிர அது சென்றடைய வேண்டிய கலங்களுக்குள் சென்று சேராது.
தொடர்ச்சியாக போதுமான அளவு குளுக்கோஸ் கிடைக்காத பட்சத்தில் தமக்குரிய சக்தியைப் பெற்றுக்கொள்ள மாற்று எரிபொருட்களை உபயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் கலங்களுக்கு ஏற்படும். இதற்காக உடம்பிலே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்புக் கரைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும்.
அதேநேரம், இரத்தத்தில் அதிகரித்துக் காணப்படும் குளுக்கோசானது சிறுநீரினூடாக வெளியேற முற்படும்.
எனவே இந் நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்குத் தூண்டப்படுவார்கள்.
சிறுநீரோடு- வெளியேறும் நீரின் அளவும் அதிகரிப்பதால்
இவர்களது உடலில் நீர்த்தன்மை குறைவடைந்து - இவர்களுக்கு மிகுந்த தாகம் ஏற்படும்.
அத்தோடு உடற் சோர்வும் களைப்பும் இலகுவில் உண்டாகும்.
மாற்றுச் சக்திப் பிறப்பாக்கத்திற்காக கொழுப்பு- கரைக்கப்படுவதாலும், தொடர்ச்சியாக உடலில் இருந்து நீர் இழக்கப்படுவதாலும் இவர்களது உடல் நிறை குறைவடைந்து செல்லும்...
நீரழிவைக் கட்டுப்படுத்துவதால் உள்ள பயன்களையும், கட்டுப்படுத்தாமல் விடுவதால் ஏற்படும் பின்விளைவுகளையும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்
பி.கு- 1)சொல்ல வந்த விடயத்தை இலகுபடுத்துவதற்காக அடிப்படைகளை மட்டும் தொட்டுக் காட்டியுள்ளேன்.
2) உடல் மெலிவதற்கான ஏனைய காரணங்கள் பற்றித் தனியான பதிவொன்றைப் பின்னர் இடுகிறேன்.