பாலமுனையில் அமைந்துள்ள கல்முனை பிராந்திய ஆய்வு கூடத்தின் விரிவாக்கல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
பாலமுனையில் அமைந்துள்ள கல்முனை பிராந்திய ஆய்வு கூடத்தின் பொறுப்பாளர் உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இபாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
குறித்த மேம்படுத்தல் நிகழ்வின் பின்னர் கல்முனை பிராந்தியத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து கிடைக்கப்பெறும் இரத்த சிறுநீர் மற்றும் சலி மாதிரிகளை ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்து அதன் பெறுபேறுகளை சிற்றூழியர்கள் மோட்டார் சைக்கிளில் கொண்டு சேர்ப்பதற்குமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
இதனால் எரிபொருளை சிக்கனமாக பாவிப்பதற்கும் மருத்துவ ஆய்வு கூட உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கும் மருத்துவ பரிசோதனை கருவிகளை முகாமைத்துவம் செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. .
இந்நிகழ்வில் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹீர், மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.ஏ.கபுர், பிராந்திய மலேரியா மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌசாட், மாவட்ட ஆயுர்வேத பிராந்திய இணைப்பாளர் டாக்டர் எம்.ஏ.நபீல்,தொழில் மற்றும் சுற்றுச்சூழல் உணவுப் பாதுகாப்பு பிராந்திய வைத்தியப் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம்.றௌசாட், பொதுமக்கள் சுகாதார பிராந்திய பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.ஏ.எஸ்.எம்.எஸ்.சாபி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.