முஸ்லிம் அரசியலை மையப்படுத்திய தேசிய கட்சி ஒன்று - தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) இணைந்து அரசியல் பணியை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்தையை முடுக்கியுள்ளதாக தகவல்.
முஸ்லிம் அரசியலில் கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகளை அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளை முன்வைத்து தேசிய மக்கள் சக்தியின் ஒப்புதலை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக பெற்றுக்கொண்டதன் பின்னரே இந்த அரசியல் இணைவு இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது.
இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவுற்றுள்ளதாகவும் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்தை வெற்றியடைந்தால் தேசிய மக்கள் சக்தியின்(NPP) பாரிய பொதுக் கூட்டம் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாகவும் அதிலிருந்து அரசியற் பணிகளை வீரியமாக கொண்டு செல்லவுள்ளதாகவும் அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார்.
இலங்கை அரசியலில் நடக்கப்போவது என்ன என்பதனை இந்தியாவின் ரோ அனுமானித்துள்ளது. அதனாலே அநுரகுமார திசாநாயக்காவின் இந்தியா விஜயமும் அமைந்திருந்தது. இந்த அரசியல் நகர்வில் முஸ்லிம் சமூகம் அரசியல் அநாதையாகும் நிலை ஏற்படுவதனை தடுக்கும் நோக்கிலே இந்த முஸ்லிம் கட்சி இவ்வாறான ஒரு முடிவினை நோக்கி நகர்ந்துள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் பாரம்பரிய முஸ்லிம் அரசியல் கலாசாத்தை ஒழித்து புதிய அரசியல் கலாசாரம் ஒன்றினை தோற்றுவிக்கும் அனுரகுமார திசாநாயக்க பாரம்பரிய கட்சிகளை இணைப்பதில் ஆர்வம் காட்டுவதனை தவிர்த்து வருவதாகவும் புதிய தலைமைத்துவத்தினை கிழக்கில் இருந்து தோற்றுவிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் அதானேலேயே இந்த கட்சியை இணைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி ஆர்வம் காட்டுவதாகவும் அந்த முக்கியஸ்தர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.