மும்பை : மும்பை அணி வீரரான சிவம் துபே கடந்த இரண்டு சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று வருகிறார். அதற்கு முன் ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளில் அவர் இடம் பெற்ற போதும் ஆல் - ரவுண்டரான அவரால் ஜொலிக்க முடியவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோலியுடன் பல சீசன்களாக ஆடி இருந்தார் சிவம் துபே. இடையே அவருக்கு இந்திய அணியில் கூட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவரால் ஐபிஎல் தொடரிலும், இந்திய அணியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் இருந்தது.
இந்த நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிவம் துபேவை 4 கோடி கொடுத்து வாங்கியது. இவரை வாங்கியது வீண் என அப்போது சிஎஸ்கே ரசிகர்களே விமர்சனம் செய்தனர். ஆனால், தோனி எனும் குரு, சிவம் துபேவை பட்டை தீட்டினார். அவரை பந்துவீச்சாளராக பார்க்காமல் வெறும் அதிரடி பேட்ஸ்மேனாக பார்த்தார் தோனி.
அதன் விளைவாக 2023 ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் பல முறை சிஎஸ்கே அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார் சிவம் துபே. இதை அடுத்து அவருக்கு இந்திய டி20 அணியிலும் வாய்ப்பு தேடி வந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் நிலைத்து நின்று அரைசதம் அடித்து தன் திறமையை நிரூபித்தார். அப்போது தனது சிறப்பான ஆட்டத்துக்கு காரணம் தோனி மற்றும் சிஎஸ்கே அணி தான் என சிவம் துபே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
டி20 போட்டிகளுடன் நிற்காமல் தற்போது மும்பை அணிக்காக உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபி தொடரிலும் சிவம் துபே கலக்கலாக ஆடி வருகிறார். அசாம் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சீசனின் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார் சிவம் துபே. 87 பந்துகளில் சதம் அடித்து மொத்தம் 121 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இன்னிங்ஸில் அவருக்கு அடுத்ததாக எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 31 தான். அந்த அளவுக்கு மும்பை அணியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் சிவம் துபே.
2023 - 2024 ரஞ்சி ட்ராபி தொடரில் பந்துவீச்சில் 7 இன்னிங்ஸில் 12.08 பந்துவீச்சு சராசரியில் 12 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார் சிவம் துபே. அவரது பந்துவீச்சு சராசரி அதிக விக்கெட் வீழ்த்திய முதல் பத்து வீரர்களை காட்டிலும் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பேட்டிங்கில் 7 இன்னிங்ஸில் 407 ரன்கள் குவித்துள்ளார். இரண்டு சதம், இரண்டு அரைசதம் அடித்துள்ளார்.