அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பொய் சொல்லி ஏமாற்றினாரா என்றொரு கோணத்தில் புதியதொரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் அவரை விசாரணைக்கு அழைத்த சம்பவம் மற்றும் அதற்கு சமூகமளிக்காமல் இருக்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்த காரணம் என்பன தொடர்பில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு தரமற்ற இம்யூனோகுளோபின் உள்ளிட்ட ஏராளமான மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.
பத்திரங்கள் மர்மம்
இது தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட ஏழு பேர் தற்போதைக்கு விளக்கமறியலில் உள்ளனர்
அதே நேரம் குறித்த காலப்பகுதியில் மருந்துக் கொள்வனவு தொடர்பான பத்திரங்களில் செயற்படுத்துகை குறிப்பு எனப்படும் மினிட்ஸ்களை உள்ளடக்கிய பத்திரங்கள் மர்மமாக காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அண்மையில் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு மாளிகாகந்தை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதற்கமைய நேற்றுமுன்தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள வேறொரு வழக்கிற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளதால் தன்னால் விசாரணைக்கு வர முடியாது என்றும் அதற்காக வேறொரு தினத்தை ஒதுக்குமாறும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
பலரிடம் வாக்குமூலங்கள்
ஆனால் அவர் உண்மையில் நேற்றுமுன்தினம் வேறொரு வழக்கிற்கு முன்னிலையாகாமல் இருந்த காரணத்தினால் தான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாமல் போனதா? அல்லது இந்த விடயத்தில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பொய்யான காரணம் கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை திசைதிருப்பும் வகையில் நடந்து கொண்டாரா என்பது குறித்து தற்போது புதிய விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றுமுன்தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானாரா? அவரின் வழக்கு எத்தனை மணிக்கு ஆரம்பமானது?, முடிவடையும் போது நேரம் என்ன?, அமைச்சர் நீதிமன்ற வளாகத்தில் எவ்வளவு நேரம் செலவழித்தார்? நீதிமன்றத்தை விட்டும் எத்தனை மணிக்கு சென்றார்? என்பன குறித்த தகவல்களைத் திரட்டும் பணியில் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று களத்தில் இறங்கியுள்ளனர்.
அதன் ஒருகட்டமாக மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று காலை நீதிமன்ற வளாகத்தில் வைத்து பலரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இன்றையதினமும் கெஹெலிய ரம்புக்வெல்லவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.