டெல்லியில் 400 ஆண்டு பழமையான மசூதி இடிப்பு

 



டெல்லி: டெல்லியில் 400 ஆண்டு பழமை வாய்ந்த மசூதி இடித்துத் தள்ளப்பட்டதால் முஸ்லீம் சமூகத்தினர் வேதனை அடைந்துள்ளனர். பதட்டம் நிலவுகிறது.


மெஹ்ரோளியிலுள்ள திபியாவாலி என்ற பெயரில் அறியப்படும் மசூதியை டெல்லி விரிவாக்க துறையும் காவல்துறையும் இணைந்து இடித்தது.



26ம் தேதியன்று மாலை 4 மணியளவில் மசூதியை இடிப்பதற்கான எஸ்கவேட்டரும் மற்ற உபகரணங்களுமாக அப்பகுதிக்கு வந்த டெல்லி விரிவாக்கத் துறையினர், மசூதியின் மேற்பகுதியையும் சுவர்களையும் இடித்துத் தள்ளியது.


மசூதி இடிக்கப்படும் செய்தியறிந்து அப்பகுதியில் கூடிய முஸ்லிம்கள், மசூதியை இடிப்பதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் காவல்துறையின் உதவியுடன் மசூதி இடிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து விரிவாக்கத்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாக காவல்துறை தடியடி நடத்திக் கூட்டத்தை விரட்டியது.


சட்ட விரோதமான ஆக்ரமிப்பு என்ற பெயர் கூறி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் காலத்திலேயே இம்மசூதியினை இடிப்பதற்கு முயற்சி நடந்தது. இருப்பினும் வி.பி.சிங் இதைத் தடுத்து நிறுத்தி விட்டார்.


இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இதில், மசூதி இருக்கும் நிலையிலேயே தொடர வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இம்மசூதி புராதன கட்டிடங்களின் பட்டியலில் உள்ளதாகும்.


மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டெல்லி விரிவாக்கத் துறையினருடன் ஆலோசனை நடத்தப்படும் என வக்ஃப் போர்ட் செயலர் சவுதரி மதீன் அஹமது கூறினார்.


அதிகாரிகளின் அத்துமீறிய இச்செயல் சட்ட விரோதமானது என மசூதியின் நிர்வாக கமிட்டி தலைவர் மவுலானா முஹம்மது தல்கா கருத்து கூறினார்.


இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section