மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றார் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர்
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டியதொரு நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஏறாவூர் பிரதேசத்தின் தாழ்நிலைப் பகுதிகளும் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் அங்குள்ள வீடுகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்களை தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை (9) தொடர்பு கொண்ட கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் அம்மாவட்டத்தின் தற்போதைய வெள்ள நிலைமை தொடர்பாகவும் அனர்த்தம் ஏற்பட்டுள்ள மக்களின் பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் வகையில் அவசரமாக மாற்றுத்திட்டங்களை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் தங்குமிட வசதி மற்றும் உணவு தேவைகளை அவசரமாக பூர்த்தி செய்யுமாறும் குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிடுமாறும் முன்னாள் அமைச்சர் வேண்டிக்கொண்டார்.
அரசாங்க அதிபர் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு உடன் விஜயம் செய்வதாகவும் மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர்களுக்கும் இது தொடர்பாக அறிவிப்பதாகவும் தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்