கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவத்தின் சந்தேக நபர் இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெளிநாடு செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் பணிபுரியும் இவர், பணி முடிந்து அலுவலக சேவை பேருந்தில் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு வந்துள்ளார்.
பின்னர் ஹொரணை-கொழும்பு வீதியில் சென்றுகொண்டிருந்த குறித்த பெண்ணை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் கொலையை செய்த நபர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளார்.
பிலியந்தலை மடபாத்தை - ஜபுரலிய பகுதியைச் சேர்ந்த துலஞ்சலி அனுருத்திகா என்ற 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரது கணவர் பாணந்துறை வைத்தியசாலையில் வைத்தியராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலையாளி வந்த மோட்டார் வாகனம் தொடர்பில் விசாரணை நடத்தியதில் கொலையாளி குறித்த தகவல் பொலிஸாருக்கு தெரியவந்தது.
இதன்படி, சந்தேகநபர் வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டன்ஸ்டன் பிரசாத் என்ற 47 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் சந்தேகநபருக்கும் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் இடையில் சில காலமாக நெருங்கிய தொடர்பு இருந்தமை தெரியவந்துள்ளது.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரைக் கொல்லப் பயன்படுத்திய கூரிய ஆயுதங்கள் மற்றும் அதற்காக வந்த காரைக் கண்டுபிடித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபர் எல்டோ தர்மே என்ற பாதாள உலக உறுப்பினரின் மூத்த சகோதரர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.