எந்தவொரு கட்டுப்பாடுகளையும் கவனத்தில் கொள்ளாது, இன்று வீதியில் இறங்கி தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முதல் போராட்டத்தை நடத்தப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் அல்லது வேறு எவரும் எந்த தடையையும் விதிக்கலாம். ஆனால், அனைத்து சட்டங்களையும் மீறி இன்று 50,000 பேரை கொழும்புக்கு அழைத்து வரவுள்ளதாக மத்தும பண்டார ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
2022 இல் எழுச்சிக்கு முன்னோடியாக ஐக்கிய மக்கள் சக்தியே இருந்தது. இம்முறையும் அந்த எழுச்சிக்கு ஆரம்பத்தை கொடுக்க கட்சி உத்தேசித்துள்ளதாக மத்தும பண்டார கூறியுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் வரி அதிகரிப்பு போன்ற அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
எங்கு போராட்டம் நடத்தப்படும் என்பதை உரிய நேரத்தில் வெளிப்படுத்தவுள்ளதாக ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்.