மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு வன ஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் குளங்கள், வாவிகள், ஆறுகளிலிருந்து நீர் நிரம்பிக் காணப்படும் நிலையிலேயே அங்கிருந்து முதலைகள் வெளியேறி மக்களது குடியிருப்புக்குள் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்று நேற்று மாலை திருப்பழுகாமம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மாடு ஒன்றை பிடித்துச் சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை கொண்டு செல்லும் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி பகுதியில் இன்று காலை முதலையொன்று புகுந்ததனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் குளங்கள், வாவிகள், ஆறுகள், நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.