குறைந்த வருமானம் பெறும், குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தை, சுகததாச உள்ளக விளையாட்டரங்கு அருகில், மாதம்பிட்டிய, கொலம்பகே மாவத்தை, நாவல ஆகிய பகுதிகளில் இந்த தொடர்மாடி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர இதனை தெரிவித்துள்ளார்.
வீட்டுரிமை பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை
இதேவேளை, தற்போது வீடுகள் வழங்கப்பட்டுள்ள மக்களுக்கான வீட்டுரிமை பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான 14, 000 வீட்டுரிமை பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், அவற்றில் 8,000 வீட்டுரிமை பத்திரங்கள் இந்த ஆண்டுக்குள் வழங்கப்படவுள்ளன.