ஆனமடுவ பிரதேசத்தில் காதலிப்பதாக யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
19 வயது யுவதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், இந்த சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட கடும் அதிர்ச்சியால், மாத்திரைகள் உட்கொண்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவகத்தகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இந்த யுவதி தனது பாட்டியுடன் அந்த பகுதியில் உள்ள அறையில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்துள்ளார்.
ஆனமடுவ நகருக்கு தேவைக்காக பணம் பெற்றுக் கொள்வதற்காக வந்த போது குறித்த இளைஞனை அடையாளம் கண்டுள்ளார்.
இவ்வாறு ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொண்ட பின்னர் இருவரும் சில காலம் நட்பாக இருந்த நிலையில், அண்மையில் யுவதியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேசுவதற்காக 15ஆம் திகதி தன்னை சந்திக்க வருமாறு யுவதியிடம் அந்த இளைஞர் கூறியுள்ளார்.
ஆனமடுவ நகரிற்கு யுவதியை அழைத்த இளைஞன் அங்கு துஷ்பிரயோகம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், வீடு திரும்பிய யுவதி, நடந்த சம்பவத்தை தனது தந்தையிடம் கூறிவிட்டு, கழிவறைக்கு சென்று மாத்திரைகள் சிலவற்றை உட்கொண்டுள்ளார்.
யுவதியின் பெற்றோர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.