தென்கொரியாவைத் தனது முதன்மை எதிரி நாடாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில், இதனால் அங்கே மிகவும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தென் கொரியாவை தனது நாட்டின் "முதன்மை எதிரி" என்று அறிவித்துள்ளார். எல்லையில் 0.001 மிமீ அத்துமீறினால் கூட போரை ஆரம்பிக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.
தென்கொரியா வடகொரியா இடையே பல காலமாக மோதல் இருந்தாலும் கூட கடந்த வாரம் தான் தென்கொரியாவை முதன்மை எதிரி நாடாக வடகொரியா அறிவித்தது.
தென்கொரியாவை முதன்மை எதிரி என வடகொரியா சொல்வது வெறும் எச்சரிக்கை மட்டும் இல்லை. அது எப்போது வேண்டுமானாலும் போராகவும் மாறலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
சிறு சிறு இராணுவ மோதல்கள் எப்போது வேண்டுமானாலும் போராக மாறலாம் என்பதே பலரது அச்சமாக இருக்கிறது. ஒரு பக்கம் ரஷ்யா வடகொரியாவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், மறுபுறம் அமெரிக்கா தென்கொரியாவுக்கு ஆதரவாக இருக்கிறது.
பூமியை அழிக்கும் அபாயம்
இதனால் இந்த பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலாக மட்டும் இல்லாமல் அது உலகப்போராக விரிவடையும் அபாயமும் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
தற்போது இருக்கும் சூழலை வைத்துப் பார்க்கும் போது இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ மோதல் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். வடகொரியாவிடம் இப்போது அணு ஆயுதங்களும் இருக்கும் நிலையில், அது உலக நாடுகளைப் பதற்றத்தில் தள்ளுகிறது.
ஏனென்றால் இப்போது பல நாடுகளில் அணு ஆயுதங்கள் இருக்கும் நிலையில், அது பூமியை மொத்தமாக அழிக்கும் அபாயம் இருக்கிறது. வடகொரியா பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கின்ற நிலையில் தென்கொரியா எந்தளவுக்கு வளர்ந்து இருக்கிறது குறித்து தகவல்கள் வடகொரியா மக்களுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது.
இதனால் மக்களைத் திசை திருப்பவே வடகொரிய ஜனாதிபதி கிம் இப்படியெல்லாம் செய்வதாகச் சர்வதேச வல்லுநர்கள் கூறியுள்ளனர்.