நாரம்மல, தம்பலஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் நேற்று (18) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
லொறி ஒன்றை நிறுத்தி பொலிஸார் சோதனையிட்ட போதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் தனது சிறிய லொறியில் கட்டுபொத்த பிரதேசத்தில் இருந்து தம்பலஸ்ஸ பகுதி ஊடாக தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
நாரம்மல பகுதியில் வீதியில் இருந்து இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் லொறியை நிறுத்துமாறு ஆணையிட்ட போதும் சாரதி லொறியை முன்னோக்கி செலுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது காரை துரத்திச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்பலஸ்ஸ பிரதேசத்தில் காரை நிறுத்தி சோதனையிட்ட போது இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த லொறியின் சாரதி நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது அருகில் இருந்த ஒருவர் அதனை கைத்தொலைபேசியில் பதிவு செய்திருந்தார்.
வெத்தேவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்தையடுத்து பிரதேசவாசிகள் நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குவிந்ததையடுத்து அந்த இடத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.